தேர்தல் ஆணையத்திடம் உண்மையை மறைத்தாரா பொள்ளாச்சி ஜெயராமன்? - மகன் கார் விபத்தில் புதிய சர்ச்சை | controversy in Pollachi jeyaraman's son accident case issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (16/03/2019)

கடைசி தொடர்பு:16:28 (16/03/2019)

தேர்தல் ஆணையத்திடம் உண்மையை மறைத்தாரா பொள்ளாச்சி ஜெயராமன்? - மகன் கார் விபத்தில் புதிய சர்ச்சை

திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சிவபிரகாசம்

தமிழக சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன், கடந்த 2016 - ம் ஆண்டு ஓட்டிச் சென்ற கார், திருப்பூர் அருகே விபத்துக்குள்ளானதில் அவருடன் பயணித்த கல்லூரி மாணவி வீர சுரேகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழக்கு, திருப்பூர் ஜே.எம் 4 நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில், விபத்துக்குள்ளான அந்தக் காரை தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிடாமல் விட்டது, அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றிப் பேசிய திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சிவபிரகாசம், ``கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், திருப்பூரில் நடந்த பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட கார், பொள்ளாச்சி ஜெயராமனின் பெயரில்தான் இருந்திருக்கிறது. அந்த விபத்து நிகழ்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விபத்துக்குள்ளான கார் தன்னுடையதுதான் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் கொடுத்து காரையும் திரும்பப் பெற்றிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன். ஆனால், அதே 2016 - ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது வேட்புமனுத் தாக்கல் செய்த பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் ஆணையத்திடம் தனக்கு மொத்தம் 7 கார்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதில், விபத்தில் தொடர்புடைய அந்தக் காரைப் பற்றிய தகவல் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. அந்த சந்தேகத்தின் அடிப்படையில், தற்போது பிரவீன் விபத்து வழக்குகுறித்த தகவல்களைத் தேடி விசாரித்தோம். குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களில் இருக்கும் தகவல்களுக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருக்கும் கருத்துகளுக்கும் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது. அதன் காரணமாகவே, பொள்ளாச்சி ஜெயராமன் மீதான சந்தேகங்களும் அதிகரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதுபற்றி விளக்கம் கேட்க துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனைத் தொடர்புகொண்டோம், " அவர் கொஞ்சம் பிசியாக இருக்கிறார். வந்தவுடன் திரும்ப அழைக்கச்சொல்கிறோம் என்ற பதிலுடன் முடித்துக்கொண்டார்கள் அவரது தரப்பினர்.


[X] Close

[X] Close