`நீருக்கடியில் ஆய்வுசெய்யும் இந்திய ரோபோ!’ - சென்னையில் அறிமுகம் | Planys Technologies launches new underwater Robot

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (16/03/2019)

கடைசி தொடர்பு:17:52 (16/03/2019)

`நீருக்கடியில் ஆய்வுசெய்யும் இந்திய ரோபோ!’ - சென்னையில் அறிமுகம்

ரோபோ

நீருக்கடியில் மூழ்கி ஆய்வுசெய்யும் வகையில், முழுவதுமாக இந்தியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட  ரோபோ ஒன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால்  தொடங்கப்பட்ட  ஸ்டார்ட்அப் நிறுவனமான Planys இதை  வடிவமைத்துள்ளது. ROV MIKROS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, நீருக்கடியில் உள்ள கட்டமைப்புகளை ஆய்வுசெய்வதற்குப் பயன்படும். இதுபோன்ற பணிகளில் பெரும்பாலும், நீர் மூழ்கி வீரர்களே தற்போது பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள். அவர்களைவிட இந்த ரோபோ சிறப்பாகச் செயல்படுவதோடு மட்டுமின்றி, கூடுதலான தரவுகளையும் சேகரிக்கும்.  நீருக்கு மேல் இருந்தே இந்த ரோபோவை இயக்க முடியும். சந்தையில் இருக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ROV MIKROS

நேற்றைக்கு சென்னையில் நடந்த அறிமுக விழாவில்,  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் ( சுத்திகரிப்பு நிலையங்கள்) ஆர். ராமச்சந்திரன் இதை அறிமுகப்படுத்தி வைத்தார். பெரிய அளவிலான குழாய்களுக்குள்ளே அனுப்பி, இதன் மூலம் தரவுகளைச் சேகரிக்க முடியும். எனவே, அப்படிப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்ட பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும். தற்போது, 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த ரோபோவைப் பயன்படுத்திவருவதாக Planys நிறுவனம் தெரிவித்துள்ளது. 


[X] Close

[X] Close