உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2,44,110 பறிமுதல்! - இராஜபாளையத்தில் களமிறங்கிய பறக்கும்படை | rs.2,44,110 seized from lorry near rajapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (16/03/2019)

கடைசி தொடர்பு:18:10 (16/03/2019)

உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.2,44,110 பறிமுதல்! - இராஜபாளையத்தில் களமிறங்கிய பறக்கும்படை

இராஜபாளையம் அருகே, கொல்லத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற லாரியை மறித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதிலிருந்து ரூ.2,44,110-ஐ இன்று பறிமுதல்செய்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, பண விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராஜபாளையம் மயூரநாதசாமி கோயில் அருகே, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, கொல்லத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், கணக்கில் வராத பணம் ரூ.2,44,110 இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

பறிமுதல்

நாமக்கல்லில் இருந்து கொல்லத்துக்கு முட்டை ஏற்றிச்சென்று, அங்கிருந்து திரும்பி வந்த லாரி எனத் தெரியவருகிறது. முட்டை விற்பனை செய்த பணம் என்றால், அதற்கான உரிய ஆவணங்களைக் காட்டி இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தனர். அதேபோல, நேற்று இராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற காரை வன்னியம்பட்டி விலக்கில் மறித்த போலீஸார், அதில் இருந்து ரூ.5.60 லட்சத்தை பறிமுதல்செய்தனர். நகை வியாபாரத்திற்காக அந்தப் பணம் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர்.


[X] Close

[X] Close