` சில அசௌகரியங்கள் வரத்தான் செய்யும்!'  - ஜி.கே.வாசனிடம் வேதனைப்பட்ட எடப்பாடி பழனிசாமி  | edappadi palanisamy says people reaction about government 

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (16/03/2019)

கடைசி தொடர்பு:15:59 (18/03/2019)

` சில அசௌகரியங்கள் வரத்தான் செய்யும்!'  - ஜி.கே.வாசனிடம் வேதனைப்பட்ட எடப்பாடி பழனிசாமி 

அந்தக் காலத்தில் காமராஜர் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்தார். அவருக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தன. இப்போது அவர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுகிறார்கள். நானும் அதேபோல் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறேன்.

` சில அசௌகரியங்கள் வரத்தான் செய்யும்!'  - ஜி.கே.வாசனிடம் வேதனைப்பட்ட எடப்பாடி பழனிசாமி 

அ.தி.மு.க கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். ` தொலைநோக்குப் பார்வையோடுதான் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். இதை மக்கள் புரிந்துகொள்வதில்லை' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் முதல்வர். 

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை வரையறை செய்து முடித்துவிட்டனர். அ.தி.மு.க அணியில் சில தொகுதிகளில் இழுபறி நீடிப்பதால், எந்தக் கட்சிக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஓரிரு நாள்களில் தொகுதிகளை இறுதிசெய்து அறிக்கை வெளியிட இருக்கிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில், நேற்று மாலை எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன். இந்த சந்திப்பில், கூட்டணியில் இணைந்தது, அ.தி.மு.க அரசின் செயல்பாடு உள்ளிட்டவைகுறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்துள்ளனர். 

ஜி.கே.வாசன், எடப்பாடி பழனிசாமி

சென்னை அடையாறில் உள்ள முதல் அமைச்சர் வீட்டுக்கு ஜி.கே.வாசன் உட்பட த.மா.கா நிர்வாகிகள் 50 பேர் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, `` கூட்டணிக்கு நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி' எனக் கூறிவிட்டு சமோசா, பாதாம் அல்வா, முந்திரிப் பருப்பு, டீ ஆகியவற்றைக் கொடுத்து உபசரித்தார். அதன்பிறகு பேசிய ஜி.கே.வாசன், ` கூட்டணியின் வெற்றிக்காக உழைப்போம், டூர் பிளான் போட்டுக்கொண்டிருக்கிறேன். அது முடிவானதும் மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன் '' எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

அவர் பேசிய பிறகு, மனம் திறந்து சில விஷயங்களைப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் பேசும்போது, ` நான் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறேன். இதற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெருகியுள்ளது. நாம்  ஏதாவது வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால், சிலரிடம் இருந்து எதிர்ப்பு வரத்தான் செய்கிறது. ஆனால், தொலைநோக்கு அடிப்படையில் பார்த்தால், மக்களுக்குத்தான் அந்தப் பலன்கள் வந்து சேரும். அந்தக் காலத்தில் காமராஜர் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்தார். அவருக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்தன. இப்போது அவர் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

நானும் அதேபோல எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இது ஒரு மிகப் பெரிய கனவுத் திட்டம். இதன்மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்கும். தற்போது புதிதாக விமான நிலையங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறேன். சாலை விரிவாக்கம் செய்யும்போது நிலங்களை எடுக்கவேண்டியதாக இருக்கிறது. மக்களும் எதிர்காலத் தேவைகளைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அதனால்தான் சில இடங்களில் பிரச்னை வருகிறது. மக்களுடைய நிலத்தைப் பிடுங்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. வளர்ச்சித் திட்டங்கள் வரும்போது, சில அசௌகரியங்கள் வரத்தான் செய்யும். அதற்கேற்ப இழப்பீட்டையும் கொடுக்கிறோம்' எனப் பேசியிருக்கிறார். அவரது பேச்சை ஜி.கே.வாசனும் ஆமோதித்துக் கேட்டுக்கொண்டார். 
 


[X] Close

[X] Close