'தேர்தல் நேரத்தில் போலி பறக்கும்படை!' - கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் | fake flying squad in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (16/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (18/03/2019)

'தேர்தல் நேரத்தில் போலி பறக்கும்படை!' - கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல்

தேர்தல் பறக்கும் படை என்று சொல்லிக்கொண்டு, வாகனச் சோதனையில் மர்மக்கும்பல் ஈடுபட்டுவருகிறது. இந்தக் கும்பலிடம் ஒரு கோடி ரூபாயை இழந்திருக்கிறார், தனியார் நிறுவன மேலாளர். தேர்தல் நேரத்தில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போலி தேர்தல் பறக்கும் படை

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க, தமிழகமெங்கும் தேர்தல் பறக்கும் படை  ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார், உதயகுமார். தன்னுடைய தொழிலுக்காக ஒரு கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, இன்னும் இரண்டு நபர்களுடன், சைதாப்பேட்டை அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகில், இவர்கள் வந்த காரை சிலர் மறித்தனர்.

 

தங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் என்று சொல்லி காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் பணம் இருந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு, உதயகுமாரை காரில் ஏறச்சொல்லியுள்ளனர். அதன்பிறகுதான் உதயகுமாருக்கு தான் கடத்தப்பட்டது தெரியவந்தது. பூந்தமல்லி அருகே உதயகுமாரை அடித்து உதைத்துவிட்டு, பணத்துடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டுகேட்டபோது, ''இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது. சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகியுள்ளதா என்பதை விசாரித்துவருகிறோம்'' என்று முடித்துக்கொண்டனர்.


[X] Close

[X] Close