`ஒரு தொகுதியில் நடக்கும் இழுபறி'... பா.ம.க - பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் எப்போது? | bjp and pmk candidates list will released soon

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:50 (16/03/2019)

`ஒரு தொகுதியில் நடக்கும் இழுபறி'... பா.ம.க - பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?

பா ஜ க

தி.மு.க-வுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அ.தி.மு.க. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த தி.மு.க, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள், வேட்பாளர்களின் பட்டியலையும் விறுவிறுப்பாக அறிவித்துவருகின்றன.

ஆனால், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பதில் இழுபறி நீடித்துவருகிறது. அ.தி.மு.க-வின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இரண்டு நாள்களில் பா.ஜ.க  வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும் என்று அந்தக் கட்சியின் தரப்பில் கூறப்படுகிறது. 

பா.ம.க

இதுகுறித்து பா.ஜ.க-வில் உள்ள முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, "பா.ஜ.க-வுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பது இறுதியாகி விட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனும், சிவகங்கையில் ஹெச். ராஜாவும் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனும், கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள். ராமநாதபுரத்தில் குப்புராம் மற்றும் நயினார் நாகேந்திரன் இருவரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது. அந்தத் தொகுதியின் வேட்பாளர் முடிவாகிவிட்டால் வெளியிடுவார்கள். அந்த ஒரு தொகுதி முடிவாகாமல் இருப்பதால்தான் இன்னும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடாமல்  உள்ளனர். எப்படியும் இரண்டு நாள்களுக்குள் பட்டியலை வெளியிடுவார்கள்" என்று கூறினார் . 

அதேபோன்று, பா.மக வேட்பாளர்கள் பட்டியல்குறித்து அந்தக் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாலுவிடம் பேசியபோது, 'நாளை நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் வெளியாகும். வேட்பாளர்கள் குறித்துச் சொல்ல முடியாது. சில நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அதனை உறுதியாக தற்போது சொல்ல முடியாது. இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்" என்றார்.


[X] Close

[X] Close