`முகிலன் விரைவில் மீட்கப்பட வேண்டும்’ - நெல்லையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்! | social activists agitate to find out the missing activist mugilan

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (16/03/2019)

கடைசி தொடர்பு:21:16 (17/03/2019)

`முகிலன் விரைவில் மீட்கப்பட வேண்டும்’ - நெல்லையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் காணாமல் போன நிலையில், அவரை மீட்க காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நெல்லையில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். பொறியியல் பட்டதாரியான இவர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மனித உரிமை செயற்பாட்டாளராகச் செயல்பட்டுவருகிறார். கூடங்குளம் அணு உலைப் பிரச்னை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன் எரிவாயு திட்டம் , ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடினார். 

அத்துடன், தாது மணல் பிரச்னை, ஆற்று மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை, சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் காவிரி நதிநீர் விவகாரத்திலும் மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில், கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைக் கண்டித்து தொடர் பரப்புரையும் செய்துவந்தார். 

கடந்த 15-ம் தேதி, சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு ரயில் மூலமாக மதுரை செல்லத் திட்டமிட்டிருந்த அவர் மாயமானார். அவரை யாரேனும் கடத்தினார்களா என்பதுகுறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்ட நிலையில், அவர் மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 

முகிலனை கண்டுபிடிக்க கோரி ஆர்ப்பாட்டம்

முகிலனைக் கண்டுபிடிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கு சென்றார் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரைக் காணவில்லை என சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிவித்து போஸ்டர்கள் ஒட்டியபோதிலும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்,  அவரை விரைவில் கண்டுபிடித்துத் தரக் கோரி, நெல்லைச் சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட பொது நல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், சமூக ஆர்வலர்களான பீட்டர், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள், முகிலனைக் காவல் துறை மீட்டுத் தர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். 


[X] Close

[X] Close