நெல்லைக்கு வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் - தீவிரமடையும் தேர்தல் பணிகள்! | paramilitary force came to nellai for parliamentary election security

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (16/03/2019)

கடைசி தொடர்பு:21:43 (16/03/2019)

நெல்லைக்கு வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் - தீவிரமடையும் தேர்தல் பணிகள்!

தேர்தல் பணிக்காக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் நெல்லைக்கு வருகைதந்தனர். அவர்கள், இன்று முதல் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 

இந்தோ-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க உள்ளது. தமிழகத்தில், ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடக்கிறது. அதனால், மாநிலம் முழுவதும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. நெல்லை மாவட்டத்திலும் வாகனச் சோதனை, அரசு சுவர்களில் எழுதப்பட்ட அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு எனப் பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில், இந்திய–திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், தேர்தல் பணிக்காக நெல்லை வந்துள்ளனர். அவர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி பகுதியில் உள்ள முகாமில் இருந்து உதவி கமாண்டன்ட் அஜய்ஆனந்த் தலைமையில் வந்துள்ளனர். 83 பேர் கொண்ட இந்த வீரர்கள், பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

உதவி கமாண்டன்ட் அஜய்ஆனந்த், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பாஸ்கரனைச் சந்தித்து, இன்று முதல் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள்குறித்து கேட்டறிந்தார். உடனடியாக வீரர்கள் அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணிகளைத் தொடங்கினார்கள். வாகனச் சோதனை, ரோந்துப்பணி ஆகிய பணிகள் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், தேர்தல் சமயத்தில் பதற்றமான வாக்குச்சாவடி கண்காணிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், மூன்று கம்பெனிப் படையினரும் நெல்லைக்கு வர உள்ளனர். 

பாதுகாப்புப்படை வீரர்கள்

இதனிடையே, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சுவிதா செயலி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபாகர்சதீஷ் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டு செயலி குறித்து பயிற்சி அளித்தனர். இந்தச்  செயலி மூலம்  தேர்தலுக்கான பிரசார  வாகன அனுமதி,  தேர்தல் அலுவலகம்  திறப்பு, பொதுக்கூட்ட அனுமதி போன்றவை வழங்கப்பட உள்ளன. 


[X] Close

[X] Close