கச்சத்தீவு திருவிழாவில் இருநாட்டு பக்தர்கள் பிரியாவிடை - அதிக அளவில் சிங்களர்கள் பங்கேற்பு! | Two Country devotees participating in the Kachchatheevu festival

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (16/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (16/03/2019)

கச்சத்தீவு திருவிழாவில் இருநாட்டு பக்தர்கள் பிரியாவிடை - அதிக அளவில் சிங்களர்கள் பங்கேற்பு!

கச்சத்தீவு திருவிழாவிற்குச் சென்ற இந்திய பக்தர்கள், திருவிழா முடிந்து ஊர் திரும்பினர். இரு நாட்டு பக்தர்களும் கலந்துகொண்ட விழாவில், இம்முறை அதிக அளவில் சிங்கள மக்கள் பங்கேற்றனர்.

கச்சத்தீவு


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இன்னும் பிரச்னைக்குரிய தீவாக கச்சத்தீவு இருந்துவந்தாலும், அது புனிதத் தீவாகத்தான் இருநாட்டு மக்களிடையே பார்க்கப்படுகிறது. இதற்கு, அங்குள்ள புனித அந்தோணியாரே காரணம். 287ஏக்கர் பகுதியைக் கொண்டுள்ள கச்சத்தீவு, ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தூரத்திலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இங்கு, ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில்  திருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்தத் திருவிழாவில், இருநாடுகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்  கலந்துகொண்டனர்.

 இந்நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க, நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 64 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப்படகுகள் மூலம் 2229 பக்தர்கள் சென்றனர். கச்சத்தீவில்  மார்ச்  15 -ம் தேதியான நேற்று மாலை, கொடியேற்றத்துடன் அந்தோணியார் திருவிழா தொடங்கியது. நெடுந்தீவு பங்கு தந்தை எமிலிபால்  தலைமையில் சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜ் திருவிழா கொடியை ஏற்றிவைத்தார்.

கச்சத்தீவு திருவிழா

 
 இதனைத் தொடர்ந்து, சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.  திருவிழாவின்  2-ம் நாளான இன்று காலை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இதில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிரஞ்சன், இலங்கைக் கடற்படை கட்டளை அதிகாரி ரவீந்திர குண விஜயரத்தின, வடக்கு மாகான கடற்படை அதிகாரி பியல் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் இரு நாட்டு பக்தர்களும்  பங்கேற்றனர்.

திருவிழா

 
 வழக்கத்திற்கு மாறாக, இம்முறை அதிக அளவில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள் கச்சத்தீவுக்கு வந்திருந்தனர். இந்திய - இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு இணையாகச் சிங்கள மக்களின் வருகையும் இருந்தது. இதையடுத்து, இம்முறை திருப்பலி வழிபாட்டின் ஒவ்வொரு முறையும் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டது. இறுதியில், அந்தோணியார் தேர் பவனியும் அதனைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு பக்தர்களும் தங்களுக்குள் பிரியாவிடை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினர். 

  கச்சத்தீவில் இருந்து இன்று மாலை திரும்பிய இந்தியப் பயணிகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சோதனையின்போது இலங்கையில் இருந்து மதுபானம் வாங்கிவந்த இருவருக்கு சுங்கத் துறையினர் அபராதம் விதித்தனர்.


[X] Close

[X] Close