‘அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கத் திட்டம்!’ - வேலூர் மாவட்டத்தில் 2,200 ரௌடிகள் கண்காணிப்பு | 'Planning to get money from politicians!' - Monitoring of 2,200 rowdys in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (17/03/2019)

கடைசி தொடர்பு:14:10 (17/03/2019)

‘அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கத் திட்டம்!’ - வேலூர் மாவட்டத்தில் 2,200 ரௌடிகள் கண்காணிப்பு

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பிருப்பதால், வேலூர் மாவட்டத்தில் ரௌடிகள் மற்றும் வழிப்பறி கொள்ளையர்கள் என மொத்தம் 2,200 பேரை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

வேலூர் சிறை

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், முன்னெச்சரிக்கையாக வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அரசியல்வாதிகளை மிரட்டிப் பணம்பறிக்க ரௌடிகள் திட்டம் தீட்டுவார்கள். இதனைத் தடுக்க, ரௌடிகள் மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கும் பணியை வேலூர் மாவட்ட காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாவட்டத்திற்குட்பட்ட 8 உட்கோட்டத்தில் இருக்கும் 73 போலீஸ் நிலையங்களில் 1,500 ரௌடிகள் மற்றும் 700 கொள்ளையர்கள் என மொத்தம் 2,200 பேர் இருப்பதாகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இளம் ரௌடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். 92 ரௌடிகள் கண்காணிக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பல்வேறு சிறைகளில் உள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரௌடிகள் மற்றும் வழிப்பறி கொள்ளையர்கள் விடுதலையாகும் தேதியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளுக்கு மிரட்டல்கள் வந்தால், தைரியமாகப் புகார் தெரிவிக்கலாம். உரியப் பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரத்துக்காகப் பொய்யான புகார் அளித்தால், அரசியல்வாதிகள் மீதே நடவடிக்கை பாயும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.


[X] Close

[X] Close