ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் போட்டி - கெளதமன் அறிவிப்பு! | i will contest in loksabha election says director gowthaman

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/03/2019)

கடைசி தொடர்பு:08:54 (18/03/2019)

ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு ஆதரவுடன் தூத்துக்குடி தொகுதியில் போட்டி - கெளதமன் அறிவிப்பு!

``மண்ணையும் மக்களையும் காக்க, தமிழ் பேரரசு கட்சி சார்பில், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் ஆதரவுடன்  வரும் மக்களவைத் தேர்தலில் துாத்துக்குடியில் போட்டியிடுவேன். இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்." என இயக்குநர் கெளதமன் தெரிவித்துள்ளார்.

கௌதமன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஐ.நா., சபையில் பேசியவருமான இயக்குநர் கௌதமன் துாத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாளுக்கும் மேலாக  மக்கள் நடத்திய போராட்டத்தில் 15 மனித உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக் கொன்ற ரத்தம் இன்னும் காயவில்லை. இந்த  நிலையில், தமிழக மக்களும், துாத்துக்குடி மக்களும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளனர்.

இந்த ஆலையை அக்ரிமெண்ட் போட்டு இங்கு அழைத்து வந்தவர்களும், திறந்து வைத்தவர்களும் எங்களை சந்திக்க வரும்போது, இந்த மக்கள் சார்பில் நீங்கள் ஏன் எங்கள் சார்பில் போட்டியிடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் என்னைக் கேட்டுக்கொண்டனர். அதற்காக ஆலோசனை நடத்துவதற்காக இங்கு வந்தேன். சிலரை சந்தித்துள்ளேன்.

இன்னும் சிலரை சந்திக்க வேண்டியுள்ளது. சில தினங்களில், என் முடிவை அறிவிப்பேன். அவ்வாறு முடிவெடுத்து அறிவித்தபின், பின்வாங்க மாட்டேன், உறுதியாக இருப்பேன். இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதே எங்களின் முக்கியமான பணி. கடந்த 23 வருடங்களாக ஆலைக்கு எதிராகப் போராடி, 15 உயிர்களை பலிகொடுத்துள்ளோம்.

இங்குள்ள  99 சதவிகித அரசியல் கட்சிகள், ஆலையிடம் பணம் வாங்கியிருக்கிறார்கள். இல்லை என்று அவர்களால் மறுக்க முடியுமா? தற்போது மூடியிருக்கும் ஆலை,தேர்தலுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படலாம். அதனால், மண்ணையும் மக்களையும் காக்க, தமிழ் பேரரசு கட்சி சார்பில் நான் துாத்துக்குடியில் போட்டியிடுவேன். இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்." என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close