தஞ்சை தொகுதியில் களம்காணும் பொன்.முருகேசன் : அதிருப்தியில் அ.ம.மு.க நிர்வாகிகள் | Lok sabha Election -2019 ammk party Announced the Candidate

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (17/03/2019)

கடைசி தொடர்பு:16:10 (18/03/2019)

தஞ்சை தொகுதியில் களம்காணும் பொன்.முருகேசன் : அதிருப்தியில் அ.ம.மு.க நிர்வாகிகள்

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.ம.மு.க சார்பில் எஸ்.டி.எஸ் செல்வம் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக பிரிஸ்ட் கல்வி குழுமத்தின் நிறுவனர் பொன்.முருகேசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இது தஞ்சை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், `இவர் எங்க கட்சியில் உறுப்பினர் கூட கிடையாது. இவர் இப்ப பெரிய பணக்காரராகவே இருந்தாலும்கூட தேர்தல்ல பெருசா சொல்லிக்குற மாதிரியெல்லாம் செலவு செஞ்சிட மாட்டார். இவருக்குச் சொந்தமான பொன்னையா ராமஜெயம் கல்வி நிறுவனங்களில் அடிப்படை வசதிகள் ஒழுங்காக இல்லை அங்க படிக்கும் மாணவர்கள் பல முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கல்விக் கட்டணமும் அதிகம். இங்க படிக்கக்கூடிய மாணவர்களின் குடும்பங்கள் இவர் மேல கடும் அதிருப்தியில் இருக்கும்போது இவருக்கு எப்படி டி.டி.வி தினகரன் சீட் கொடுத்தார்னு தெரியலை. நியாயமாக பார்த்தால் எஸ்.டி.எஸ் செல்வத்துக்குதான் இங்க சீட் கொடுத்திருக்கணும் இவர் அ.ம.மு.க-வில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் பட்டுக்கோட்டையில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.

தஞ்சை மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகளோடு நெருக்கமான தொடர்பில் இருப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவரின் தந்தையான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி சோமசுந்தரத்தின் முயற்சியால்தான் தஞ்சாவூர் இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்தது. 1991-96-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது எஸ்.டி.எஸ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, 8-வது உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சையில் நடைபெறச் செய்து இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். அ.தி.மு.க-வில் உள்ளவர்களுக்கு கூட இப்பொழுதும் எஸ்.டி.எஸ். குடும்பத்தினர் மீது நல்ல அபிப்ராயம் உண்டு. எஸ்.டி.சோமசுந்தரத்தின் மீதான மதிப்பின் காரணமாக இவரின் மகன் எஸ்.டி.எஸ் செல்வந்துக்கு மக்கள் வாக்களிப்பார்கள். கட்சித் தலைமை இதைப் பரிசீலனை செய்ததா என்பது தெரியவில்லை’’ என ஆதங்கத்தோடு பேசினார்.

ஆனால் அ.ம.மு.க-வின் மற்றொரு தரப்பினரோ ``இது நாடாளுமன்றத் தேர்தல் அதிகமாக செலவு செய்யக்கூடியவங்களுக்கு சீட் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். பொன்.முருகேசன் கட்சியில் உறுப்பனர் இல்லைனாலும் கூட, எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்ய அவர்கிட்ட வசதி இருக்கு. தி.மு.க சார்பில் பழனிமாணிக்கமோ இல்லைனா, வேறு யாராவது செல்வாக்கு மிக்க வசதிப்படைத்த நபர் இங்க வேட்பாளராக நிறுத்தப்பட்டால் பொன்.முருகேசனால்தான் ஈடு கொடுக்க முடியும். இவரோட கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடிய பத்தாயிரம் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களோட வாக்குகள் இவருக்கு கண்டிப்பாக விழும். இதை முக்கிய காரணமாக சொல்லிதான் பொன்.முருகேசன் சீட் கேட்டார். கடந்த தேர்தலின்போதே அ.தி.மு.க சார்பில் போட்டியிட ஜெயலலிதாகிட்ட சீட் கேட்டிருந்தார். கண்டிப்பாக இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.” என்கிறார்கள்.


[X] Close

[X] Close