மத்திய அரசு அதிகாரி; ஓய்வுக்குப் பின் அரசியல் - நீலகிரி அ.ம.மு.க வேட்பாளர் யார்? | retired IAS officer will contest lok sabha election in Nilgiri's

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (17/03/2019)

கடைசி தொடர்பு:16:14 (18/03/2019)

மத்திய அரசு அதிகாரி; ஓய்வுக்குப் பின் அரசியல் - நீலகிரி அ.ம.மு.க வேட்பாளர் யார்?

நீலகிரி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி போட்டியிடவுள்ளார்.

நீலகிரி அமமுக வேட்பாளர்

தமிழகத்தில் நாடாளுமன்றத் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதனிடையே, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளைம், பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி (தனி) எம்.பி., தொகுதியில் இம்முறை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நேரடியாகக் களம் காண்கின்றன. இந்த நிலையில், அ.ம.மு.க சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை டி.டி.வி தினகரன் இன்று காலை அறிவித்தார். இதன்படி நீலகிரி தொகுதியில் அ.ம.மு.க சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராமசாமி போட்டியிட உள்ளார். நீலகிரி தொகுதி அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ராமசாமி. திருநெல்வேலி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

கடந்த 1951-ல் பிறந்த இவர் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 1977-ல் திருப்பூர் ஆர்.டி.ஒ., (வருவாய் கோட்டாட்சியர்), திருவள்ளுர் மாவட்டத்தில் ஆர்.டி.ஒ., காஞ்சிபுர மாவட்ட உணவு விநியோக அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். 1979-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், துணை கலெக்டராகவும் பணி புரிந்துள்ளார். தொடர்ந்து மத்திய அரசின் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று மகாராஷ்டிரா மாநில ஒதுக்கீட்டில் அம்மாநில சோலாப்பூர் சப்-கலெக்டர், பண்டிதபுரம் துணை ஆட்சியர் மற்றும் சத்தரா மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.

இடையில் சிறிது காலம் பாண்டிச்சேரியில் மத்திய அரசு செயலாளராகவும் இருந்துள்ளார். இறுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண்துறை முதன்மைச் செயலாளராக இருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்குப் பின்பு சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில், இன்றைக்குள் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விடும். அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பின்பு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது.


[X] Close

[X] Close