இந்திராகாந்தியின் வாரிசுகள் ஜனநாயகம் பேசுவது நகைப்புக்குரியது - இல.கணேசன்! | BJP Leader ila ganeshan Slams congress party

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:15 (18/03/2019)

இந்திராகாந்தியின் வாரிசுகள் ஜனநாயகம் பேசுவது நகைப்புக்குரியது - இல.கணேசன்!

கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம் என்பதைக் கண்டறிய தற்போது குழு அமைத்துள்ளோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மீண்டும் 5 ஆண்டுகள் அவகாசம் தேவை. மக்களிடம் அதைக்கேட்டு வாக்கு சேகரிப்போம். பேச்சுரிமை, கருத்துரிமையை மறுத்த இந்திராகாந்தியின் வாரிசுகள் இன்று ஜனநாயகம் பேசுவது நகைப்புக்குரியது என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

இல.கணேசன்

பா.ஜ.க மதுரை பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநிலச் செயலரும், கோட்டப் பொறுப்பாளருமான இரா.ஸ்ரீனிவாசன் மற்றும் விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது, வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமைதான் வெளியிடும். டெல்லியில் இதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளதால் ஓரிரு நாள்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் கொடுமை மோசமான, காட்டுமிராண்டித்தனமான சம்பவம். கண்டிக்க வேண்டிய சம்பவம் இது. இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றுதான் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம். மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம்.

பா.ஜ.க கூட்டம்

தமிழ்நாட்டு மக்களிடம் மோடியா? ராகுல்காந்தியா? எனக் கேட்டால் விவரம் தெரிந்த யாரும் நரேந்திரமோடிக்குதான் வாக்களிப்பார்கள் என்றார். கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை என்ற கேள்விக்கு, கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவிகிதம் அமல்படுத்தியுள்ளோம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நாங்களே ஒரு குழு அமைத்துள்ளோம். எஞ்சிய அம்சங்களை அமல்படுத்த மீண்டும் 5 ஆண்டு காலம் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் எனக் கேட்போம். கொடுத்த வாக்குறுதிகளை அதிகம் நிறைவேற்றியது இந்த அரசுதான் என்றார்.

பாஜக ஆதரவாளர்கள்

பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடும் உரிமையை முடக்கி வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். நம் முன்னோர் உருவாக்கிய அரசியலமைப்பு சாசனம் வலுவானது. அதை மாற்ற முடியாது. மாற்றுவது குறித்து எந்தக் கட்சியும் சிந்திக்கக்கூட முடியாது. இந்திராகாந்தி மட்டும்தான் அதிகாரத்தைப் பயன்படுத்தியதோடு, ஆணவத்தோடு அவசர நிலையைக் கொண்டு வந்தார். அவரின் வாரிசுகள் இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் எனப் பேசுவது நகைப்புக்குரியது'' எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ``சௌகிதார் என்பது நல்ல வார்த்தை.   `அட ஒப்புரானே சத்தியமா நான் காவல்காரன், அதை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்..' என்ற சினிமா பாடலை பாடி, இந்தப் பாடலை நரேந்திரமோடியே பாடுவதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்'' எனத் தெரிவித்தார்.