தொடர்ந்து மூன்றாவது முறையாக நீலகிரி தொகுதியில் களமிறங்கும் ஆ.ராசா | A.Raja Contest in Nilgiris Constituency on third time

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (17/03/2019)

கடைசி தொடர்பு:16:17 (18/03/2019)

தொடர்ந்து மூன்றாவது முறையாக நீலகிரி தொகுதியில் களமிறங்கும் ஆ.ராசா

தி.மு.க., சார்பில் நீலகிரி தொகுதியில் 3-வது முறையாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் 7-வது முறையாக ஆ.ராசா போட்டியிடுகிறார். 

நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று  வெளியிடப்பட்டது. இதில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு மீண்டும் ஆ.ராசா போட்டியிடுகிறார். ஆ.ராசா, கடந்த 1996-ம் ஆண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தோற்கடித்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜரத்தினத்திடம் தோற்றார். 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு, அ.தி.மு.க. வேட்பாளர் ராஜரத்தினத்தை தோற்கடித்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க., வேட்பாளர் சுந்தரத்தை தோற்கடித்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆ.ராசா

 

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், முதன் முறையாக கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணனை தோற்கடித்து மீண்டும் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார். 6-வது முறையாக மீண்டும் அவருக்கு தி.மு.க-வில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில், 7-வது முறையாக மீண்டும் நீலகிரி தொகுதியில் ராசா போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க. சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஸ். அதிகாரி ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வேட்பாளர் இன்னும் வெளியிடப்படாத நிலையில் நீலகிரி தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளர் யார் என்ற ஆவல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.