நெல்லை அருகே கல்குவாரிக்கு எதிராக திரளும் மக்கள் - தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு! | nellai villagers are plan to boycott parliamentary election

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (18/03/2019)

கடைசி தொடர்பு:07:25 (18/03/2019)

நெல்லை அருகே கல்குவாரிக்கு எதிராக திரளும் மக்கள் - தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கல்குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அதனால் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பைக் கிராமத்தினர் வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆனையூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் அருகில் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமாக கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரி செயல்படுவதால், தங்கள் கிராமத்துக்கு பெரும் பாதிப்பாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கிராமத்துக்கு அருகில் இருக்கும் குவாரியை நிறுத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

ஆனால், குவாரியை நிறுத்த மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பலரிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இருக்கவில்லை. போராட்டங்களை நடத்தினார்கள். அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். மக்களுக்கு இடையூறாக இருக்கும் குவாரியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன் பின்னரும் கல்குவாரி இயங்கி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குவாரியை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 3-ம் தேதி உத்தரவிட்ட பின்னரும் இதுவரையிலும் குவாரியை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து குவாரி இயங்கி வருவதால் அப்பகுதி மக்கள் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தக்கோரி காவல் துறைக்கும் கனிமவளத் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

போராட்ட அறிவிப்ப்பு

அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் ஆனையூர் கிராம மக்கள் சார்பாக கூட்டம் போடப்பட்டது. அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில், கிராமத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டதுடன், அறிவிப்பு பலகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.