நெல்லையில் குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் பலி - மீன் பிடித்தபோது நடந்த விபரீதம்! | two students died in pond as they went for fishing

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (18/03/2019)

கடைசி தொடர்பு:08:15 (18/03/2019)

நெல்லையில் குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் பலி - மீன் பிடித்தபோது நடந்த விபரீதம்!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கிப் பலியானார்கள்.
 

குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவர்கள்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே எட்டாங்குளம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பஞ்சாயத்துக்குச் சொந்தமான குளம் இருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர்கள் மூவர் அந்தக் குளத்துக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். பழைய மீன் வலையை எடுத்துக் கொண்டு, அம்மன் கோயில் வடக்குத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 11 வயது சிறுவனும் இசக்கிமுத்து என்ற சிறுவனும் மணிகண்டன்சென்றுள்ளனர். அவர்களுடன் சரவணன் என்ற 6 வயது சிறுவனும் சென்றுள்ளான். இதில் மணிகண்டனும் இசக்கிமுத்துவும் குளத்தின் கரையோரத்தில் நின்றபடியே மீன் வலையின் மூலம் மீன் பிடித்திருக்கிறார்கள்.

மிகுந்த ஆர்வத்துடன் இருந்த அவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கத்  தொடங்கினார்கள். அப்போது கரையோரத்தில் இருந்த சரவணன் என்ற சிறுவன் கதறி உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. 

அதனால் அந்தச்  சிறுவன் அழுதுகொண்டே ஊருக்குள் ஓடிச் சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக இசக்கிமுத்துகாரில் வந்த குறிச்சிகுளம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான இஸ்மாயில், காரை நிறுத்தி விவரம் கேட்டுள்ளார். அப்போது இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய விவரத்தை அறிந்ததும் பதறியடித்து குளத்துக்குச் சென்று பார்த்துள்ளார். அதற்குள் இரு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், அவர் குளத்துக்குள் தேடியிருக்கிறார். 

அதற்குள் தகவல் அறிந்து கிராமத்தினர் திரண்டனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கிராமத்தினரே  குளத்துக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய இருவரையும் தேடினார்கள். ஆனால், இருவரும் உயிரிழந்து விட்டதால், அவர்களின் உடல்களை மீட்க மட்டுமே முடிந்தது. உயிரிழந்த இரு சிறுவர்களின் உடல்களைப் பார்த்து பெற்றோரும் உறவினரும் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மானூர்  காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.