திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நுழைவாயில் இடிப்பு - தலைவர்கள் கடும் கண்டனம்! | tamilnadu political leaders give voice give against trichy thanthai periyar memorial institute compound eviction matter

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (18/03/2019)

கடைசி தொடர்பு:09:05 (18/03/2019)

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நுழைவாயில் இடிப்பு - தலைவர்கள் கடும் கண்டனம்!

தமிழக நெடுஞ்சாலைத்துறை திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச் சுவரை ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் இடித்துத் தள்ளிய சம்பவத்துக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பெரும் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்

இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ``திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மருந்தியல் கல்லூரி, மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றது.

பெரியார் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்றும், அதை அகற்ற வேண்டும் என திருச்சி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் கடந்த 6-ம் தேதி கடிதம் அனுப்பியது.

வீரமணி

அதையடுத்து, கடந்த 11-ம் தேதி, `மேற்படி நிலம் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும், தாங்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் எங்களுக்குச் சொந்தமானது இல்லை; இந்த நிலத்தை நாங்கள் இல்லாமல் எப்படி சர்வே செய்தீர்கள்? 7 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கூறுவது, சட்டத்துக்குப் புறம்பானது. நாங்கள் எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்புச் செய்யவில்லை. தேவையென்றால் தாங்கள், நில அளவையர் மூலம் எங்கள் முன்னிலையில் நிலத்தை அளந்துகொள்ளலாம்' என நாங்கள் பதில்கடிதம் அனுப்பியதுடன், கோட்டப் பொறியாளருக்கு நகலும் அனுப்பி வைத்தோம்.

அடுத்து கடந்த 15-ம் தேதி, மாநகராட்சி சர்வேயர்கள் வந்து எங்கள் இடத்தை அளந்தார்கள். முதலில் 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கூறியவர்கள், தற்போது அதைவிடக் கூடுதலாக 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

எனவே, நிலம் அளந்தது எதுவும் சரியில்லை, எனவே அடிப்படை ஆவணங்களை  ஒப்பிட்டு, நிலத்தை மீண்டும் அளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதுவரை மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்`` என திருச்சி உதவி கோட்ட பொறியாளர், கோட்டப் பொறியாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தோம்.

இப்படியிருக்க, அன்னை மணியம்மையார் நினைவு நாளான கடந்த 16-ம் தேதி இரவு அவர் கட்டிக்காத்த பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர்களை பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை சர்வே செய்தபோது குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பின் அளவு முரண்பாடாக உள்ளது. எனவே, மீண்டும் முறையாக அளக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபொழுது, அதையெல்லாம் காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறிய அதிகாரிகள், தான்தோன்றித்தனமாகப் பெரியார் கல்வி நூற்றாண்டு வளாக சுவரை இடித்துள்ளனர். பெண்கள் அதிகம் படிக்கும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புச் சுற்றுச்சுவரை இடித்தது துளியும் நியாயம் இல்லை. இதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருக்கிறது” என்றும்,

``நெடுஞ்சாலைத்துறை அனுப்பிய கடிதத்தில், பெறுநர், பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என உள்ளது. அந்தக் கல்வி நிறுவனம் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானது - யாருக்குக் கடிதம் அனுப்பப்படவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஏதோ அவசர கதியில் இடித்துத் தள்ள வேண்டும் என்ற வெறியில் யாரோ சிலரின் கண்ணசைவில் இதை நடத்தியுள்ளனர்.

பெரியார் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் மற்றும் பெண்கள் இல்லம் முதலியன இயங்கி வருகின்றன. சுற்றுச்சுவர் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்று நன்கு தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாக இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபரீதம் எதுவும் நடந்தால், அதற்கு நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பாகும்.

தஞ்சை வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில், திறந்தவெளி சிறைச்சாலைக்கான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன - அவற்றை உடனடியாக அகற்றிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், இதுவரை துரும்பளவும் நடவடிக்கையை எடுக்காத இந்த அ.தி.மு.க. அரசு பெரியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளுகிறது என்றால், இந்த அரசு யாருக்கான அரசு என்பது திட்டவட்டமாகவே தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

இதேபோல் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, `` நெடுஞ்சாலைத்துறைக்குப் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டபோதிலும், அவசர கதியில் திடீரென்று பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர் பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜ.க. ஆட்சியின் கண் அசைவில் இயங்கிக்கொண்டு இருக்கின்ற தமிழக அ.தி.மு.க அரசின் சட்டவிரோதமான இந்த நடவடிக்கையை ம.தி.மு.க., வன்மையாகக் கண்டிக்கிறது.

வைகோ

கடந்த காலத்தில் தலைநகர் டெல்லியில், பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, எத்தகைய அதிர்ச்சியையும், நெஞ்சக் கொதிப்பையும் நான் கொண்டேனோ அதே உணர்வில்தான் இப்போதும் இருக்கிறேன். தமிழக அரசின் அராஜகமான இந்தப் போக்கைக்கண்டு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும், பெரியாரிய உணர்வாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். சட்டவிரோதமான இந்தச் செயலுக்கு நீதிகேட்டு, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் முறையிட்டு வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை.

இடிக்கப்பட்ட சுற்றுச் சுவரை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக கட்டித் தர வேண்டும். சட்ட விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், பொறுப்பற்ற வகையிலும் இடித்துத் தள்ளிய அ.தி.மு.க அரசின் அதிகாரிகளையும், அவர்களின் பின்னே உள்ள சூதுமதியாளர்களையும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் மீண்டும் வன்மையாகக் கண்டிக்கிறது” என அறிக்கை விடுத்துள்ளார். .

இதேபோல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துவருவதால் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக சுற்றுச்சுவர் இடிப்புவிவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.