``ஜோதிமணிதான் வேட்பாளரா?” - கரூர் தொகுதி தி.மு.க கூட்டணியில் என்ன நடக்கிறது? | Is Karur Congress candidate Jyothimani

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:22 (18/03/2019)

``ஜோதிமணிதான் வேட்பாளரா?” - கரூர் தொகுதி தி.மு.க கூட்டணியில் என்ன நடக்கிறது?

 ஜோதிமணி ஆதரவாளரின் போஸ்ட்
 

தி.மு.க கூட்டணியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமை கரூர் தொகுதி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு, `கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரிப்பீர்' என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது ஜோதிமணியின் எதிர் தரப்பைக் கொந்தளிக்க வைத்துள்ளது.


 ஜோதிமணி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க-வுக்கே ஒதுக்கப்படும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கரூரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, அறிவித்தார். இந்த நிலையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், `நானே வேட்பாளர்' என்று பலரும் கச்சைக் கட்டி வருகிறார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், மாநில செய்திதொடர்பாளர் ஜோதிமணி, முன்னாள் கரூர் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணி, திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் உள்ளிட்ட புள்ளிகள் வேட்பாளர் ரேஸில் முந்தி இருக்கிறார்கள். 


 தி.மு.க பக்கத்தின் பதிவு

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல், `கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கைச்சின்னத்தில் வாக்களிப்போர்' என்று அவரது போட்டோவை போட்டு சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான பதிவுகள் உலா வர தொடங்கியிருப்பது, கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. ஜோதிமணியின் எதிர்கோஷ்டியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்பிரமணி தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். நேற்றுமுன்தினம்தான் விருப்பமனு செய்ய காங்கிரஸ் கட்சி தலைமை கடைசி நாளாக நிர்ணயம் செய்திருந்தது. ஜோதிமணியே நேற்றுமுன்தினம்தான் விருப்பமனு செய்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன் தினத்திலிருந்து, ஜோதிமணியை வேட்பாளராக சித்திரித்து சமூகவலைதளங்களில் பதிவுகள் உலா வருவது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


 பேங்க் சுப்பிரமணி

 

இதுபற்றி, விசாரித்தோம். நம்மிடம் பேசிய சிலர், ``இந்த வேலையை ஆரம்பித்து வைத்ததே தி.மு.க தரப்புதான். அ.ம.மு.க-விலிருந்து தி.மு.கவுக்கு வந்த செந்தில்பாலாஜிக்கு குறுகிய காலத்திலேயே மாவட்டப் பொறுப்பாளர் பதவி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம், கரூர் நாடாளுமன்றத் தொகுதியையும், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க வசமாக்குவதாக ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி வாக்குறுதி கொடுத்ததுதான். அதனால், கரூர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டாலும், தான் ஸ்டாலினுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நினைக்கிறார். அதற்காக, பல வியூகங்களை வகுத்து வருகிறார். அதனால்தான், தனது சோர்ஸ் மூலம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணிதான் என்பதை அறிந்து, ஏன் தாமதிக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ஜோதிமணியை வேட்பாளராக சித்திரித்து, தகவலை பரப்பினார். 


 செந்தில்பாலாஜி

அவர் பெயரில் உள்ள கரூர் மாவட்ட தி.மு.க-வின் அதிகாரபூர்வ பக்கத்தில்தான் ஜோதிமணி முதன்முதலில் வேட்பாளராக சித்திரிக்கப்பட்டு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து, ஜோதிமணி ஆதரவாளர்களும், மாவட்டத்தில் பொதுவாக உள்ள ஜோதிமணி அபிமானிகளும் இதை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிர, விஷயம் சர்ச்சையாகும் அளவுக்கு வந்துட்டு. `நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அக்காவுக்கு வாக்கு சேகரிக்க தொடங்க உள்ளோம். அனைவரும் ஆதரிப்பீர். வெற்றி நமதே..'னு ஜோதிமணி ஆதரவாளர் பதிவு போடும் அளவுக்கு விஷயம் பெரிசாயிட்டு. இதைப்பார்த்துக் கொதித்துப் போன, ஜோதிமணியின் அரசியல் எதிரியான பேங்க் சுப்ரமணி தரப்பு, தனியாக கூட்டம் போட்டு பேசியதோடு, `கரூரில் ஜோதிமணியைத் தவிர்த்து வேற யாரை வேண்டுமானாலும் நிறுத்தட்டும். ஜோதிமணிதான் வேட்பாளர்ன்னா, தோல்வி நிச்சயம்' என்று பேசி இருக்கிறார்கள். அதோடு, `கட்சிக்கு ஜோதிமணி செய்த துரோகம்..' என்று பல தகவல்களையும் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறது. எது எப்படி இருந்தாலும், கட்சி அறிவிக்கும் முன்பு, ஜோதிமணியை வேட்பாளராக சித்திரித்தது தவறுதான்" என்றார்கள்.