வேலூர் தொகுதி வேட்பாளர்களின் `மஞ்சள் கலர்’ சென்டிமென்ட்! | The yellow colour sentiment of candidates

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:59 (18/03/2019)

வேலூர் தொகுதி வேட்பாளர்களின் `மஞ்சள் கலர்’ சென்டிமென்ட்!

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன், எப்போதும் அணியும் மஞ்சள் நிற சட்டையிலிருந்து வெள்ளை சட்டைக்கு மாறியிருக்கிறார். அதே நேரத்தில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் திடீரென மஞ்சள் நிற டவலுடன் வலம்வருகிறார். மஞ்சள் கலர் இரு வேட்பாளர்களின் பராக்... பராக்... சென்டிமென்ட் என்று தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் - ஏ.சி.சண்முகம்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தும், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறார்கள். துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் எப்போதும் மஞ்சள் நிற சட்டைதான் அணிந்திருப்பார். தி.மு.க-வின் கரை வேட்டி அணிந்ததில்லை. அறிவாலயத்தில் தந்தை இருப்பதால் அரசியல் கருத்துகளை வெளிப்படையாகவும் பேசியதில்லை. அ.தி.மு.க-வை கூட இதுவரை விமர்சனம் செய்ததில்லை. காட்பாடியில் உள்ள தன்னுடைய கிங்க்ஸ்டன் கல்லூரிக்கு லக்ஸரி காரில் சென்றுவருவார். தி.மு.க-வினருடன் நெருங்கிப் பழகியதும் இல்லை. குறிப்பாக நிதி அல்லது உதவிக் கேட்டு கல்லூரிப் பக்கம் கட்சியினர் வரக்கூடாது என்பதில் கண்டிப்போடு இருந்தவர்.

நாய் குட்டியை கொஞ்சி மகிழும் கதிர்ஆனந்த்

இந்த நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, முழுநேர அரசியல்வாதியாக கதிர்ஆனந்த் விஸ்வரூபம் எடுத்திருப்பது, தி.மு.க-வினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மஞ்சள் சட்டை, அவரைச் சாதிய கட்டமைப்புக்குள் திணிப்பதாக விமர்சனம் எழுந்ததால், கதிர்ஆனந்த் அதிரடியாக வெள்ளை சட்டை மற்றும் தி.மு.க கரை வேட்டிக்கு மாறியிருக்கிறார். தி.மு.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக முதலில் சென்று சந்தித்துள்ளார். வாக்காளர்களைச் சந்திக்க விறுவிறுப்புடன் தயாராகிவருகிறார். கதிர்ஆனந்த் பற்றிய மற்றொரு சுவாரஸ்ய தகவலும் வெளியாகியிருக்கிறது. செல்லப்பிராணிகள் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம். ஓய்வு நேரத்தில் வீட்டில் வளர்க்கும் நாய்க் குட்டிகளை கொஞ்சி மகிழ்கிறார் என்று தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அதேபோல், கதிர்ஆனந்துக்கு கடும் போட்டியாக கருதப்படும் ஏ.சி.சண்முகம், அ.தி.மு.க-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்தபிறகு மஞ்சள் கலர் டவலுடன் வலம்வருகிறார். தொகுதி முழுவதும் நிர்வாகிகளைச் சந்தித்தபோது, மஞ்சள் கலர் டவல் தோலில் இருந்தது. ஏ.சி.சண்முகத்துக்கும், மஞ்சள் கலர் சென்டிமென்ட் என்று அ.தி.மு.க சொல்கொள்கிறார்கள்.