``மறைமுகமாக ஆளுநர் தலையிடுகிறார்!’’ - பல்கலைக்கழக நிகழ்வுகள் ரத்தும் பின்னணி மர்மமும் | Madras university cancels an event presided by Supreme court justice and this is not the first time

வெளியிடப்பட்ட நேரம்: 13:27 (18/03/2019)

கடைசி தொடர்பு:13:27 (18/03/2019)

``மறைமுகமாக ஆளுநர் தலையிடுகிறார்!’’ - பல்கலைக்கழக நிகழ்வுகள் ரத்தும் பின்னணி மர்மமும்

சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்த நிகழ்வுகள் பிறகு, ரத்து செய்யப்படுவது இது முதல்முறை அல்ல என்று புகார் எழுந்துள்ளது. ஆளுநர் மறைமுகமாகத் தலையிட்டு மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிகழ்வுகளை ரத்து செய்வதாகச் சில தரப்பினர் கூறுகின்றனர்.

``மறைமுகமாக ஆளுநர் தலையிடுகிறார்!’’ - பல்கலைக்கழக நிகழ்வுகள் ரத்தும் பின்னணி மர்மமும்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் மக்கள் இயக்கங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ஆளுநர், நேரடிப் பார்வையின் கீழ் வேண்டுமென்றே ரத்து செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. 

`ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் பேரவை’ என்னும் இயக்கம் அரசியல் அமைப்புச் சட்ட முகவுரை வழிகாட்டல் பாதுகாப்புக் கருத்தரங்கம் ஆளுநர் தலையீடா - நிகழ்வு ரத்துஒன்றை சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 16.3.2019 அன்று நடத்துவதாக அறிவித்திருந்தது. இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் கலந்துகொள்ள இருந்தார். மேலும் நீதியரசர் ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் சங்கரசுப்பு, பேராசிரியர் ரேவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், தியாகு, உள்ளிட்டோரும் வெவ்வேறு அமர்வுகளில் பங்கெடுத்து உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

செல்லமேஸ்வர் பற்றி...

இந்திய நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திருக்காத விதமாகக் கடந்த வருடம் ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கான வழக்கறிஞர்களை நியமிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உச்ச நீதிமன்றம் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இந்தப் புகார் ஜனநாயகக் கட்டமைப்பையே உலுக்கியது. புகார் அளித்த நீதிபதிகளில் செல்லமேஸ்வரும் ஒருவர். பின்னர், ஜூன் 2018-ல் அவர் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்றபோது, அவர் நீதிபதிகளிடமிருந்து எந்தவிதப் பிரிவு உபசாரங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது ஏன்?

இதற்கிடையே நீதிபதி செல்லமேஸ்வர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்த நிகழ்வுதான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ``மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பான கருத்தரங்கம் என்பதால் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து அதற்கான அனுமதியும் பெற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். அதற்கான வாடகைப் பணம் முழுவதையும் செலுத்திவிட்டோம். இந்தநிலையில் எங்களை திடீரென அழைத்து, ``பல்கலைக்கழகத்தில் அந்த நிகழ்வு நடத்த முடியாது. ஆட்சிப் பணி பயிற்சி ஒன்றுக்கான நிகழ்வு நடத்துவதற்காக பல்கலைக்கழகப் பதிவாளர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டார். அது தெரியாமல் இயக்குநர் உங்களுக்கு அந்த நிகழ்வுக்கு அனுமதி அளித்துவிட்டார். அதனால் நிகழ்வு இங்கு நடத்த முடியாது’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அவசர அவசரமாக வெளியே இடங்கள் தேடினோம். வேறு எங்கும் இடம் கிடைக்காததால் ரத்து செய்துவிட்டோம்’’ என்றனர்.

செல்லமேஸ்வரர் நிகழ்வு ரத்து - ஆளுநர் தலையீடா

பெயர் வெளியிட விரும்பாத சில பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகையில், ``மாணவர்கள் அல்லது வெளியிலிருந்து வரும் இயக்கங்கள், அமைப்புகள் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் உமர் காலித் பங்குபெற இருந்த நிகழ்வும் இப்படித்தான் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. டிசம்பர் 6-ம் தேதி அன்று மாணவர்கள் ஒருங்கிணைப்பில் `In the name of God’ ஆவணம் திரையிடப்பட இருந்தது. அதையும் நிர்வாகம் திரையிடக் கூடாது என்று தடுத்தது. தற்போது நீதியரசர்கள் பங்கு பெற இருந்த நிகழ்வையும் நடத்தவிடாமல் தடுத்துள்ளனர்’’ என்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்மற்றொரு பக்கம், ``பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நேரடிப் பார்வைக்குச் செல்கிறது. அவர் முடிவு செய்யும் நிகழ்வுகள் மட்டும்தான் வளாகத்தில் நடைபெறுகின்றன. அரசுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லும் நிகழ்வுகள் என்றால் எவ்வித மறுபரிசீலனையும் இல்லாமல் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது’’ என்கின்றனர். இதற்கிடையே ஒருங்கிணைப்பாளர்களிடம் பதிவாளர் தரப்பு சொன்னதுபோல, அங்கே ஆட்சிப் பணி தொடர்பான பயிற்சி நடைபெறுகிறதா எனப் பல்கலைக்கழக வளாகத்தில் விசாரித்தபொது, ``இல்லை. தொலைதூரக் கல்வி தொடர்பான வேறு  ஏதோ பெயரளவிலான நிகழ்வு நடக்கிறது’’ என்று பதில் கிடைத்தது.

நீதியரசர்கள் பங்கேற்க இருந்த நிகழ்வை ரத்து செய்ததன் உண்மையான காரணம் என்ன? மாணவர்களின் தன்னிச்சையான ஒருங்கிணைப்புகளிலும் கருத்துச் சுதந்திரத்திலும் ஆளுநர் மூலம் மத்திய ஆட்சி அதிகாரம் தலையிடுகிறதா. பொது இடங்களில் நடத்தப்படும் ஜனநாயக அமைப்புகளின் நிகழ்வுகள் ஒடுக்கப்படுகிறதா. இது தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளரைத் தொடர்புகொண்டோம். ஆனால், பதில் கிடைக்கவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்