``அவள் இல்லாமல் வாழ முடியாது!” - பெண் போலீஸ் தற்கொலையால் காவலர் எடுத்த விபரீத முடிவு | Police lovers attempt suicide.. trichy police in shock

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (18/03/2019)

கடைசி தொடர்பு:12:25 (18/03/2019)

``அவள் இல்லாமல் வாழ முடியாது!” - பெண் போலீஸ் தற்கொலையால் காவலர் எடுத்த விபரீத முடிவு

காதல் விவகாரத்தில் திருச்சியில் மீண்டும் காவல்துறையைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது திருச்சி காவல்துறை.

காவலர் தற்கொலை

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த திம்மாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 4 மகள்கள். அதில் ஒரு மகள் ராஜலட்சுமி, கடந்த 2014 -ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். அதையடுத்து, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள காவலர்களுக்கான குடியிருப்பில் தங்கியிருக்கும் ராஜலெட்சுமி,  திருச்சி மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ராஜலட்சுமிக்கும், அவருடன் காவல்துறையில் பணிக்குத் தேர்வான திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை இப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தற்போது சிவக்குமார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பணியாற்றி வருகிறார். காலப்போக்கில் இருவரும் பணி நிமித்தமாக அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படவே, அவர்களின் பழக்கம் காதலாக மாறியது.காதலர்களான ராஜலெட்சுமியும், சிவக்குமாரும் அடிக்கடி போனில் பேசுவதும், நேரில் சந்தித்து பேசுவதும் வழக்கமாம். இந்த நிலையில், நேற்று முன்தினம்,  திருச்சி திருவெறும்பூர் பகுதியில் பணிக்குச் சென்ற ராஜலட்சுமி பணியை முடித்து மாலை வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு காதலர் சிவக்குமார் மற்றும் தனது குடும்பத்தாருடன் அடுத்தடுத்து போன் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை சிவக்குமார் ராஜலட்சுமிக்கு போன் செய்தபோது ராஜலெட்சுமி போனை எடுக்கவில்லை.  இதனால் பதறியடித்துக்கொண்டு சிவகுமார், ராஜலெட்சுமியின் அறைக்கு நேரில் சென்று பார்த்தபோது, படுக்கையில் மயங்கிக் கிடந்த ராஜலட்சுமி, தான் விஷம் அருந்தி விட்டதாகக் கூறவே, அதையடுத்து ராஜலட்சுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார் சிவகுமார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராஜலட்சுமி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், தனது காதலி உயிர் கண் முன்னே பறிபோவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், ராஜலட்சுமி மரணம் குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் போன் மூலம் தகவல் தெரிவித்தவர், அவள் இல்லாத உலகில் நானும் இருக்கப்போவதில்லை என்று விரக்தியாகக் கூறினாராம்.

அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து புறப்பட்ட சிவக்குமார், திருச்சி-திண்டுக்கல் சாலையில் வேகமாக சென்று அந்த வழியாக வந்த லாரி மீது மோதினார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு, ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரையும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். சிவக்குமார் தொடர்ந்து ராஜலெட்சுமி நானும் வந்து விடுகிறேன் எனக் கூறிக்கொண்டே இருந்தார்.

விபத்து

ஒரு புறம் மரணமடைந்த காதலி சடலமாகக் கிடக்க, மறுபுறம் உயிருக்குப் போராடிய காதலன் சிவக்குமார் துடித்துக்கொண்டிருக்க, பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிவக்குமார், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சி கே.கே. நகர் போலீஸார் மற்றும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் காவலர் ராஜலட்சுமி தற்கொலை மற்றும் சிவக்குமார் வாகன விபத்து உள்ளிட்ட சம்பவங்களை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ராஜலெட்சுமியின் இறப்பு குறித்து தகவலறிந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் ராஜலெட்சுமியின் உடலைப் பார்த்து கதறினர். இச்சம்பவம் குறித்து ராஜலெட்சுமியின் தாய் அயினாம்பாள் திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில், ``திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்த என் மகள் ராஜலெட்சுமியை தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணியில் பணியாற்றி வரும் சிவக்குமார் தன்னைக் காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்து வந்தார் என்றும், இதன் காரணமாக எனது மகள் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனப் புகார் கொடுத்துள்ளார்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் காவலர்களான ராஜலட்சுமி-சிவக்குமார் காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், இவர்களின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா  என்கிற அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ``ராஜலட்சுமி பிரேதப் பரிசோதனை அறிக்கை கையில் கிடைத்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும்” எனக் கூறுகிறது மருத்துவமனை வட்டாரம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, காவலர் செந்தமிழ்ச் செல்வி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி காதல் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.