`வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படாதது தவறு!' - திருப்பரங்குன்றம் வழக்கில் 22-ம் தேதி தீர்ப்பு | Judgement date for thiruparangkuntram constituency

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:13:08 (18/03/2019)

`வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படாதது தவறு!' - திருப்பரங்குன்றம் வழக்கில் 22-ம் தேதி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வழக்கின் மீது வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றம்


திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், ஆளும் அ.தி.மு.க கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சரவணன், தேர்தல் வெற்றி செல்லாது எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில்,  ``இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை போட்டிருந்தார். இது ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து, ஆகையால் அந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. வழக்கை காரணம்காட்டி திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 

தேர்தல்

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு சரவணன்வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே திடீர் திருப்பமாக வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சரவணன் தெரிவித்திருந்தார். அவர் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் எழுதிய கடிதத்தில், ``திருப்பரங்குன்றம் வழக்கை திரும்பப் பெறுகிறேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் தள்ளிப்போகிறது. தொகுதி நலன் கருதி வழக்கை திரும்பப்பெறுகிறேன். என் வழக்கறிஞர் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு அளித்துவிட்டார். வழக்கு காரணமாக தேர்தல் தள்ளிப்போகக் கூடாது. வழக்கு காரணமாக தேர்தல் நடத்தக் கூடாது என்று எங்கும் நீதிமன்றம் கூறவில்லை. இருந்தாலும்  என் வழக்கைத் திரும்பப் பெறுகிறேன். அதனால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்த வேண்டும்'' என்று சரவணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக இரண்டு தரப்பு வாதங்கள் முடிந்துள்ளதால், வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமையன்று அறிவிப்பதாக நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், `தேர்தல் வழக்கை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பது தவறு'' எனவும் நீதிபதி கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.