``நீலகிரி தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்!” - அப்செட்டில் அ.தி.மு.க-வினர் | Nilgiri AIADMK Candidate

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (18/03/2019)

கடைசி தொடர்பு:13:55 (18/03/2019)

``நீலகிரி தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர்!” - அப்செட்டில் அ.தி.மு.க-வினர்

முதல்வருடன் வேட்பாளார்

.

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். நீலகிரி (தனி) தொகுதியில் இம்முறை தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகியவை களம் காண்கின்றன. இதனால் நீலகிாியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

மற்ற எந்த தொகுதிக்கும் இல்லாத சிறப்பம்சம் நீலகிரி தொகுதிக்கு உள்ளது. அதாவது நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகள் நீலகிரி மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளது. இதனிடையே நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் மூன்றாவது முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா போட்டியிடுகிறார். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தி.மு.க.-வினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

அ.ம.மு.க., சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசாமி போட்டியிடுகிறார். இதனிடையே நீலகிரி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட குன்னூர் நகராட்சித் தலைவராக இருந்த சரவணகுமார், பா.ஜ.க.-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த குருமூர்த்தி, தற்போதைய சிட்டிங் எம்.பி-யாக உள்ள கோபாலகிருஷ்ணன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் முயற்சி செய்து வந்தனர். இந்தச் சூழலில் நேற்று இரவு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட அவினாசியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தியாகராஜன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு எம்.பி., சீட் கிடைக்கும் என காத்திருந்த நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 
இதுகுறித்து நீலகிரி மாவட்ட அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``தொகுதிக்கு பரிச்சயமானவரை நிறுத்தியிருந்தால் தி.மு.க., வேட்பாளர் ராசாவுக்கு, கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நீலகிரி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத ஒருவருக்கு தலைமை சீட் கொடுத்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றனர். அறிமுகமில்லாத வேட்பாளரை அ.தி.மு.க. நிறுத்தியுள்ளதால், தி.மு.க., வேட்பாளர் ராசாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் ஆளுங்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.