``விஜயகாந்த்தைச் சந்திக்க ஆசைதான், ஆனால்...!" - உருகும் முன்னாள் எம்.எல்.ஏ.   | vijayakanth friend talking about his relationship with him

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:26 (18/03/2019)

``விஜயகாந்த்தைச் சந்திக்க ஆசைதான், ஆனால்...!" - உருகும் முன்னாள் எம்.எல்.ஏ.  

விஜயகாந்த்தை விட்டு பிரிந்த சுந்தர்ராஜன் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.

 தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த், இயல்பான மனிதர். நட்புதான் பெரியது என்று கருதிதான் தே.மு.தி.கவை விட்டு வெளியில் வந்தேன். அவரின்  நிலையைப் பார்க்கும்போது எனக்கு மனம் சங்கடமாக இருக்கிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் நம்மிடம் கண்ணீர்மல்க கூறினார். 

தே.மு.தி.க.வை உருவாக்கிய பங்கு, விஜயகாந்த்தின் சிறுவயது நண்பரான சுந்தர்ராஜனுக்கும் உண்டு. அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வானார் சுந்தர்ராஜன். சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த்துக்கும் நடந்த வாக்குவாதத்துக்குப்பிறகு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். அதன்பிறகு அ.தி.மு.க-வில் அவர்கள் ஐக்கியமானார்கள். அதில் ஒருவர் சுந்தர்ராஜன்.  

தே.மு.தி.க.விலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த மாஃபா என்கிற பாண்டியராஜன், தற்போது அமைச்சராக இருக்கிறார். அ.தி.மு.க-வில் ஐக்கியமான தே.மு.தி.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் சிலர் வேறு கட்சிகளில் சேர்ந்துவிட்டனர். ஆனால், மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏவான சுந்தர்ராஜன் அ.தி.மு.க.வில் இருக்கிறார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பிடித்துள்ளது. இதனால் தே.மு.தி.க-விலிருந்து அ.தி.மு.க-வில் சேர்ந்த அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் இதுவரை விஜயகாந்த்தைச் சந்திக்கவில்லை. இவர்களைச் சந்திக்க விடாமல் சிலர் தடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 விஜயகாந்த்தின் நண்பர் சுந்தர்ராஜன்இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``விஜயகாந்த்தும் நானும் சிறுவயது முதல் நண்பர்கள். ஒன்றாகவே வளர்ந்தோம். இயல்பாகவே அவர் ஒரு நல்ல மனிதர். அந்த நண்பர் என்கூட இல்லாததது எனக்கு வருத்தம்தான். மக்களுக்கு நல்லது செய்யதான் தே.மு.தி.க உதயமானது. 

நட்பின் காரணமாகத்தான் தே.மு.தி.க.விலிருந்து நான் வெளியில் வந்தேன். அந்த நட்புக்காகத்தான் நான் எதையும் வெளியில் சொல்லவில்லை. அ.தி.மு.க-வில் சேர்ந்தபோதுகூட விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு நான் எதுவும் சொல்லவில்லை. தற்போது அவரின் நிலையைப் பார்க்கும்போது நண்பர் என்ற முறையில் மனம் சங்கடமாக இருக்கிறது. எனக்கு நட்புதான் பெரியது. பணம் முக்கியமல்ல. 

 விஜயகாந்த்துக்கு பிரேமலதாவை பெண் பார்க்கும்போது அவர் ஷூட்டிங்கில் இருந்தார். நானும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்துதான் விஜயகாந்த்துக்கு திருமணம் செய்துவைத்தோம். அதன்பிறகு தே.மு.தி.க.வை ஆரம்பிக்க விஜயகாந்த் எங்களுடன் கேரளாவில் ஆலோசித்தார். அப்போது கட்சி ஆரம்பிக்கும் வேலைகளைச் செய்தவர்களில் நானும் ஒருவன். முதல்முறையாக விஜயகாந்த் எம்.எல்.ஏ.வானபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் நானும் ஒருவன். 

 தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பிடித்துள்ளது. இதனால் விஜயகாந்த்தைச் சந்திக்க எனக்கு ஆசை உள்ளது. என்னுடைய ஆசையை வெளிப்படுத்திவிட்டேன். ஆனால், அவரிடம் இருந்து சந்திக்க எனக்கு கிரீன் சிக்னல் வரவில்லை. வந்தவுடன் அவரைச் சந்திப்பேன். அவரைச் சந்தித்து பல ஆண்டுகளாகிவிட்டன. ஏன் அவருடன் பேசியும் ஆண்டுகள் கடந்துவிட்டன. தேர்தல் கூட்டணி அமைந்துள்ள இந்தச் சமயத்தில் விஜயகாந்த்தைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். அவரின் உடல் நலத்துக்காக பிரார்த்தனை செய்துவருகிறேன். அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும்" என்று சொல்லும்போதே சுந்தர்ராஜனின் குரல் உடைந்து கண்ணீர்விட்டார். அவருக்கு ஆறுதல் கூறி மீண்டும் பேசினோம். 

 விஜயகாந்த்

``விஜயகாந்த்தும் நானும் சிறுவயது முதல் ஒன்றாகவே இருப்போம். அவர் சினிமா துறைக்குச் சென்றபோதுகூட எங்களின் நட்பு தொடர்ந்தது. சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு வரும் விஜயகாந்த்தும் நானும் ஒன்றாக சாப்பிட்டது இன்றும் என் மனதில் இருக்கிறது. சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஜயகாந்த்துக்கு உண்டு. இதனால்தான் தே.மு.தி.க.வைத் தொடங்கினார். தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு மக்களிடையே நல்ல ஆதரவும் கிடைத்தது. ஆனால், சில காரணங்களால் தே.மு.தி.க.வின் வளர்ச்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போதுகூட அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றது எல்லோருக்கும் தெரியும். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் விஜயகாந்த்தின் படம், கட்அவுட்கள் அகற்றப்பட்டபோது தே.மு.தி.க. தொண்டர்கள் மனவேதனையடைந்திருப்பார்கள். நான், தற்போது அந்தக்கட்சியில் இல்லை.இதனால் தே.மு.தி.க. உள்கட்சி விவகாரத்தில் என்னால் தலையிட முடியாது.  என்னுடைய கட்சித் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். 

சுந்தர்ராஜன்

நான் தே.மு.தி.க.வில் இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் சென்றுள்ளேன். அந்தச் சமயத்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில்  234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதுகுறித்து ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது உடனடியாக தே.மு.தி.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு சூழ்நிலை அப்படியில்லை. தற்போது நான் எது பேசினாலும் அது அரசியலாக்கப்பட்டுவிடும். இதனால் தேர்தல் முடிந்தபிறகு விஜயகாந்த் குறித்து பல தகவல்களை உங்களிடம் சொல்கிறேன்" என்றார்.