வேலூர் தொகுதியில் மகனுக்கு சீட்... அதிருப்தியில் பா.ம.க-வில் இணைந்த துரைமுருகன் நண்பர்! | Disappointed with son's seat - Friend of the Duraimurugan joins in the PMK

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (18/03/2019)

கடைசி தொடர்பு:17:13 (19/03/2019)

வேலூர் தொகுதியில் மகனுக்கு சீட்... அதிருப்தியில் பா.ம.க-வில் இணைந்த துரைமுருகன் நண்பர்!

தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்குச் செல்வதைத் தடுக்க, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், துரைமுருகனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

வேலூர் தொகுதியில் மகனுக்கு சீட்... அதிருப்தியில் பா.ம.க-வில் இணைந்த துரைமுருகன் நண்பர்!

கனுக்காக வேலூர் எம்.பி தொகுதியைக் குறிவைத்திருக்கும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மீது அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகத் துரைமுருகனின் நெருங்கிய நண்பர் தலைமையில் தி.மு.க-வினர் சிலர் பா.ம.க-வில் இணைந்திருக்கிறார்கள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. தி.மு.க-வில் கடந்த 50 ஆண்டுகளுக்கும்மேல் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் நெருங்கிய நண்பரும்கூட. குடியாத்தம் ஒன்றியச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளராகக் கட்சியில் பொறுப்பு வகித்திருக்கிறார். மேலும், 1996 முதல் 2011-ம் ஆண்டு வரை குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் என்று கூறப்படுகிறது. 2001 சட்டமன்றத் தேர்தலில், குடியாத்தம் தி.மு.க வேட்பாளராக சீவூர் துரைசாமியை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி களமிறக்கினார். எனினும், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.

கடந்த காலங்களில், வேலூர் மாவட்டத் தி.மு.க-வில் முக்கியப் பங்குவகித்து வந்த சீவூர் துரைசாமி, திடீரென கடந்த 16-ம் தேதி பா.ம.க-வில் இணைந்திருக்கிறார். இவரின் தலைமையில் குடியாத்தத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் மற்றும் மாநிலத் துணை பொதுச் செயலாளர் இளவழகன் முன்னிலையில் பா.ம.க-வில் இணைந்தனர். இதனால், துரைமுருகன் தரப்பினர் கடுப்பில் இருக்கிறார்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடக்கிறது. தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்குச் செல்வதைத் தடுக்க, தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், துரைமுருகனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். பா.ம.க-வுக்குச் சென்ற சீவூர் துரைசாமியைத் தவிர மற்ற நிர்வாகிகளை, தாய்க் கழகத்துக்கே மீண்டும் அழைக்கத் தூதுவிட்டுள்ளனர். ஆனால், தி.மு.க-விலிருந்து மேலும் சிலரை, அ.தி.மு.க கூட்டணிக்கு அழைத்துச் செல்ல சீவூர் துரைசாமி உள்ளடி வேலைகளைச் செய்துவருவதாக தி.மு.க வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

மகன் கதிர்ஆனந்துடன் துரைமுருகன்

இதுபற்றி சீவூர் துரைசாமியிடம் பேசினோம். ‘‘தி.மு.க-வுக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன். குடியாத்தம் பகுதியில் என் தலைமையில்தான் தி.மு.க-வுக்குத் தனி கட்டமைப்பை உருவாக்கினார்கள். கலைஞர் இருந்த தி.மு.க வேறு. இன்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் பயணிக்கும் தி.மு.க வேறு. கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளைக் கண்டுகொள்வதில்லை. வேலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு, `முரசொலி’யில் அறிவிப்பு வந்தது. நான் ரூ.25,000 செலுத்தி விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பம், உடனடியாக நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணம், என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. அதிருப்தியில் இருந்த நான், பேராசிரியர் அன்பழகனைச் சந்தித்து புகார் கொடுத்தேன். பின்னர், என்னைப் புறக்கணிப்பதை உணர்ந்தேன். அவர்களை நானும் எதிர்க்கத் தயாரானேன். அ.தி.மு.க, பா.ம.க, பி.ஜே.பி உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து என்னைத் தேடிவந்தனர். பா.ம.க-வில் இணைந்துகொண்டேன். துரைமுருகன், தன்னுடைய மகனை எம்.பி-யாக்க ஆசைப்படுகிறார். தலைமை அறிவிப்பதற்கு முன்பே, தன்னிச்சையாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை எடுத்துக்கொண்டார். துரைமுருகன் மகனுக்கு எதிராகத் தேர்தல் பணிகளைச் செய்வேன்’’ என்றார்.

குடியாத்தம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் கல்லூர் ரவி, ‘‘சீவூர் துரைசாமி, தி.மு.க-வில் இல்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வேட்பாளருக்கு எதிராக வேலை செய்தவர், அவர். எங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் எங்களுக்குப் பாதிப்பில்லை. சீவூர் துரைசாமியால் பா.ம.க-வுக்குப் பிரயோஜனமும் இல்லை. அவர், ஒரு பூஜ்ஜியம். துரைமுருகனின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு மற்ற கட்சிகளில் பதவி சுகம் தேடுகிறார். அவர் சென்றிருப்பதால், பா.ம.க-விலிருந்து பலர் வெளியேறிவிடுவார்கள்’’ என்றார் காட்டமாக.


டிரெண்டிங் @ விகடன்