தேனியில் அண்ணன், தம்பியை மோதவைத்த திராவிடக் கழகங்கள்! | Brother in the same family, brother-in-law... A view of the candidates of Theni!

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (18/03/2019)

கடைசி தொடர்பு:17:15 (19/03/2019)

தேனியில் அண்ணன், தம்பியை மோதவைத்த திராவிடக் கழகங்கள்!

ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மகாராஜனும் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள லோகிராஜனும் உடன் பிறந்த சகோதரர்கள். 

தேனியில் அண்ணன், தம்பியை மோதவைத்த திராவிடக் கழகங்கள்!

டுத்த மாதம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை  தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியிட்டுவிட்டன. இன்னும், ஒரு சில கட்சிகள் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தின் பெரியகுளம் (தனி) மற்றும் ஆண்டிபட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

பெரியகுளத்தில் யார் யார்?

பெரியகுளத்தில் (தனி) அ.தி.மு.க வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். வயது 57. இவரின் தந்தை பெயர் முத்து. மனைவி பெயர் டாக்டர் வீரலெட்சுமி. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முருகனின் கல்வித் தகுதி M.A., B.Ed., M.S.W. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சமூக நல அலுவலராகப் பணியாற்றிவருகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சொந்த ஊராகக்கொண்ட முருகன், தனது பள்ளிப்படிப்பைப் பெரியகுளத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி வேட்பாளர்கள்

தி.மு.க வேட்பாளராக கே.எஸ்.சரவணக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். வயது 48. தந்தை பெயர் கே.சுருளிவேல். கல்வித் தகுதி B.E., M.B.A. தேனியில், பெட்ரோல் பங்க் சொந்தமாக வைத்துள்ளார். மேலும், வேலவர் ப்யூஸ் டிரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை மதுரை மற்றும் கரூரில் நடத்திவருகிறார். மனைவி பெயர் சரிதா. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது தேனி மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளராகப் பதவியில் உள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு முதல் தி.மு.க உறுப்பினராக இருக்கிறார். தேனி மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணை அமைப்பாளர் மற்றும் ஊராட்சி இளைஞர் அணி அமைப்பாளராகக் கடந்த காலங்களில் பதவியில் இருந்துள்ளார்.

அ.ம.மு.க வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் கதிர்காமு போட்டியிடலாம்.

ஆண்டிபட்டியில் யார் யார்?

ஆண்டிபட்டி தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சீட் கொடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மகாராஜனும் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள லோகிராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள். அண்ணன் மகாராஜன். தம்பி லோகிராஜன். 

தேனி வேட்பாளர்கள்

ஆ.லோகிராஜன், வயது 60. தந்தை பெயர் ஆங்கத்தேவர். அரசு கான்ட்ராக்ட்கள் எடுத்து பணி செய்துவரும் லோகிராஜன், டிரான்ஸ்போர்ட் மற்றும் பெட்ரோல் பங்க் தொழிலும் செய்துவருகிறார். மனைவி பெயர் கயல்விழி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க உறுப்பினராக உள்ளார். 1987-ல் முத்தனாம்பட்டி கிளைச் செயலாளர். 2002 முதல் 2007 வரை ஆண்டிபட்டி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர். 2001 முதல் 2006 வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர். 2018 முதல் தற்போது வரை முத்தனாம்பட்டி கிளைச் செயலாளர் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியச் செயலாளராகப் பதவியில் உள்ளார். இவரின் உடன்பிறந்த அண்ணன் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆ.மகாராஜன். வயது 65. தந்தை பெயர் ஆங்கத்தேவர். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு. தொழில் விவசாயம். மனைவி பெயர் சந்திரா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது ஆண்டிபட்டி ஒன்றிய தி.மு.க பொறுப்பாளராகப் பதவியில் உள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு முதல் தி.மு.க உறுப்பினர். 1974 முதல் முத்தனம்பட்டி கிளைச் செயலாளர். 1996 முதல் 2001-ம் ஆண்டுவரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார்.

அ.ம.மு.க சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிடலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்குக் கழகங்கள் சீட் கொடுத்திருப்பதைப் பற்றி தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆண்டிபட்டி தொகுதியில் வாக்கு கேட்கும்போது கடுமையாக விமர்சனம் செய்வார்கள் என சொல்லப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்