‘அரக்கோணத்தில் பா.ம.க-வை வீழ்த்த வியூகம்!’ -உதயநிதி ரசிகர்களைக் களமிறக்கிய ஜெகத்ரட்சகன்! | Heavy competition between Dmk and Pmk in arakkonam lok sabha constituency

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:28 (18/03/2019)

‘அரக்கோணத்தில் பா.ம.க-வை வீழ்த்த வியூகம்!’ -உதயநிதி ரசிகர்களைக் களமிறக்கிய ஜெகத்ரட்சகன்!

அரக்கோணம் தொகுதியில் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, உதயநிதி ரசிகர்களை ஜெகத்ரட்சகன் களமிறக்கியுள்ளார். தி.மு.க-வுடன் பா.ம.க நேரடியாக மோதுவதால், அரக்கோணத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்திருக்கிறது.

ஜெகத்ரட்சகன்

வடமாவட்டங்களில் உள்ள முக்கியமான நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாக அரக்கோணம் பார்க்கப்படுகிறது. தி.மு.க, பா.ம.க-விற்கு கணிசமான வாக்குவங்கி உள்ள அரக்கோணம் தொகுதியை, கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கைப்பற்றியது. அதற்கு முக்கிய காரணம், ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் எனலாம். இந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள பா.ம.க, அரக்கோணம் தொகுதியில் தி.மு.க-வுடன் நேரடியாக மோதுகிறது. ஏற்கெனவே, இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அரங்க வேலு, ரயில்வே இணையமைச்சராக இருந்தார். இந்த முறையும், அரங்க வேலுவையே நிறுத்த பா.ம.க தலைமை முடிவுசெய்தது. ஆனால், அரங்க வேலுக்கு உடல்நிலை சரியில்லாததால், பா.ம.க-வின் முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார். 

ஏ.கே.மூர்த்தி

அதேபோல, தி.மு.க வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அரக்கோணத்திலிருந்து, ஏற்கெனவே இவரும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த இரண்டு வேட்பாளர்களும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அரக்கோணம் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ம.க-வை வீழ்த்துவதற்காக ஜெகத்ரட்சகன் வியூகம் அமைத்துவருகிறார். இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தைக் களமிறக்கியுள்ளார். அந்த மன்றத்தின் தலைவர் சரவணன் தலைமையில் ரசிகர்களை ஒருங்கிணைத்துள்ள ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தி, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திவருகிறார். இதையறிந்த பா.ம.க, முழு வேகத்துடன் ஜெகத்ரட்சகனை தோற்கடிப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகிறது.