‘மீண்டும் மாணிக் தாகூரா?’- விருதுநகரில் கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் | congress party members against ex mp manicka tagore

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:21 (19/03/2019)

‘மீண்டும் மாணிக் தாகூரா?’- விருதுநகரில் கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்

மாணிக்கத்தாகூர்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.பி மாணிக் தாகூர் போட்டியிடுவதற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாணிக்கத்தாகூர்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ 2,61,143 வாக்குகள் பெற்றார். தி.மு.க வேட்பாளர் ரத்தினவேலு 2,41,505 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக் தாகூர் 38,482 வாக்குகள் பெற்றார். மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மக்களை சந்திக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்த எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதால், தொகுதி மக்கள் அவர்மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கும் விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, இந்தத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற மனநிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. தே.மு.தி.க வேட்பாளராக மதுரை மாவட்ட தெற்கு புறநகர் செயலராக உள்ள அழகர்சாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடனான நட்பின் காரணமாக 2009 தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் எம்.பி மாணிக் தாகூருக்குதான் இந்த முறையும் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது என விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினரே தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

காங்கிரஸ்

 சிவகாசி நகராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன் அனுப்பிய புகார் கடிதத்தில், மாணிக் தாகூரை விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராகக் கட்சி மேலிடம் அறிவித்ததால், கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் கடுமையாக உழைத்து அவரை வெற்றிபெறவைத்தோம். ஆனால், மாணிக் தாகூர் பதவிக்கு வந்த பின் மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டனர். தனி கோஷ்டிகளை உருவாக்கினார். பணம் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்கினார். இதனால், கட்சி மிகவும் பலவீனமடைந்தது. விருதுநகரின் நிலவரங்கள்கூட அவருக்குத் தெரியவில்லை.

2011-ம் ஆண்டு சட்டமன்ற வேட்பாளர் தேர்வு, நகர் மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர் தேர்வு, 2013-ல் விருதுநகர் மாவட்டத் தலைவர் தேர்வு, 2016-ல் சிவகாசி சட்டமன்ற வேட்பாளர் தேர்வு என எல்லாம் தவறாகவே முடிந்தது. எனவே, மாணிக் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பளித்தால், விருதுநகர் மாவட்டத்தில் கட்சியைக் காப்பாற்றவே முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணிக் தாகூரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது,  மாணிக் தாகூருக்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. பாராளுமன்றத்தில் தொகுதிப் பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்தவர். இந்தத் தேர்தலிலும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட அவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதில் அவர் பெயரும் இருக்கும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிறைய உண்டு. நிச்சயம் அவர் மீண்டும் வெற்றிபெறுவார் எனத் தெரிவித்தனர்.