சகோதரனை சிக்கவைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! | Youth Makes Bomb Threat call

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:25 (18/03/2019)

சகோதரனை சிக்கவைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சகோதரனை சிக்கவைக்க, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, போலீஸிடம் சிக்கிய வாலிபர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

 சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசியவர், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார். இதனால், காவல் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்று சோதனைசெய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால், அது வதந்தி என்று காவல் துறையினர் முடிவுசெய்தனர். இருப்பினும், தேர்தல் சமயத்தில் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று காவல் துறையினர் விசாரித்தனர். 

வெடிகுண்டு மிரட்டல்  

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது,  மிரட்டல் விடுத்த மர்ம நபர், பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீஸார், கோவிலம்பாக்கத்தில் வீட்டில் பதுங்கியிருந்த சுந்தர்ராஜ் (24) என்பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுந்தர்ராஜின் அப்பா அரசு பேருந்து ஓட்டுநர் என்பதும், சுந்தர்ராஜ் மனநலம் பாதிக்கபட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், சுந்தர்ராஜுக்கும் அவரின் சகோதரருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சகோதரனை சிக்கவைக்க சுந்தர்ராஜ் வெடிகுண்டு  மிரட்டல் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பள்ளிக்கரணை போலீஸார் விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.