மக்களவைத் தொகுதியில் கூட்டணிக் கட்சிகள் போட்டி - சாத்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க கவனம் | TN BY Election Dravidian Parties keeps eye on the sattur Constituency

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:22 (19/03/2019)

மக்களவைத் தொகுதியில் கூட்டணிக் கட்சிகள் போட்டி - சாத்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க கவனம்

சாத்தூர்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தே.மு.தி.க போட்டியிடுவதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியினரும் சாத்தூர் இடைத்தேர்தலிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சட்டமன்றத் தொகுதி சாத்தூர். 1952-ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், சுதந்திராக் கட்சி ஒரு முறையும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதில் தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராஜர் 1957, 1962 ஆகிய தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் இந்தத் தொகுதியிலிருந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் வெற்றி பெற்ற தொகுதி இது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன், தி.மு.க சார்பில் வி.ஸ்ரீனிவாசன், ம.தி.மு.க சார்பில் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வி.ஸ்ரீனிவாசன் 67,086 வாக்குகள் பெற்றார். 71,513 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

ஸ்ரீனிவாசன்

அவர் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.ம.மு.க-வில் இணைந்ததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே, சாத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க சார்பில் வி.ஸ்ரீனிவாசனும், அ.ம.மு.க சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஜி.சுப்பிரமணியனும், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆதரவோடு ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.

 

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தால்தான் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் அ.தி.மு.க.வும், இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற மனநிலையில் தி.மு.க.வும் உள்ளன. அதேபோல தன்னால் பதவியிழந்த தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற மனநிலையில் அ.ம.மு.க உள்ளது. எனவே, பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டும் விருதுநகர் மக்களவைத் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கியுள்ளன.

ராஜவர்மன்

மக்களவைத் தேர்தல் முக்கியமல்ல. சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம் என தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியினரும் இடைத்தேர்தலிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சாத்தூர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க வெற்றி பெற்றது. இந்தமுறை அ.தி.மு.க வாக்குகள் இரண்டாகப் பிரிவதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உண்டு என நினைத்து தி.மு.க.வினர் பணியாற்றி வருகின்றனர். அதேநேரத்தில் ம.தி.மு.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சி வாக்குகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வேலை செய்யாமல் இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தினால் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இடைத்தேர்தலில் விழாமலும் போகலாம். யார் வெற்றி பெற்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இருக்கும் எனத் தெரிகிறது. எனவே மக்களவைத் தொகுதியில் பேருக்கு கூட்டணிக் கட்சிகளுக்காக வேலை செய்தாலும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்துகின்றன.