கடன் பிரச்னையில் 4-வயதுச் சிறுவன் கடத்திக் கொலை - அதிர்ச்சியில் கன்னியாகுமரி மக்கள் | Debt Issue 4yrs Old Child Killed in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (18/03/2019)

கடைசி தொடர்பு:19:10 (18/03/2019)

கடன் பிரச்னையில் 4-வயதுச் சிறுவன் கடத்திக் கொலை - அதிர்ச்சியில் கன்னியாகுமரி மக்கள்

கன்னியாகுமரி அருகே, கடன் பிரச்னை தொடர்பாக நான்கு வயதுச் சிறுவன் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை


கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆரோக்கிய கெபின்ராஜ் (35). இவரது மனைவி சரண்யா (35).இவர்களுக்கு ரெய்னா என்ற நான்கு வயது ஆண்குழந்தை இருந்தது. சரண்யா, அதே ஊரைச் சேர்ந்த அந்தோணிசாமி  (40) என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன்வாங்கியுள்ளார். இதில், 48 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி ரூபாய் கொடுப்பது தொடர்பாக, கடந்த இரண்டு நாள்களாக இருவருக்கும் தகராறு நடந்துள்ளது.

சிறுவன்


இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, நேற்று முன்தினம் காலை 11 மணியளவில், சரண்யாவின் வீட்டுக்கு பைக்கில் சென்று அங்கு தனியாக  இருந்த நான்கு வயதுச் சிறுவன் ரெய்னாவை கடத்திக்கொண்டு சென்றுள்ளார் அந்தோணிசாமி. மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆரோக்கிய கெபின்ராஜ், சரண்யா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ரெய்னா பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், கன்னியாகுமரி போலீஸில் புகார் கொடுத்தனர்.

கொலை

புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில், இன்று காலை கன்னியாகுமரியை அடுத்த முகிலன்குடியிருப்பு கடற்கரைப் பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் உடல் மிதந்ததை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து தென்தாமரைகுளம்  காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நான்கு வயதுச் சிறுவன் கடத்தி படுகொலை செய்திருப்பதாக  காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்தோணிசாமி, ஒரு வகையில் சிறுவனின் தாத்தா உறவு எனவும், அதனால்தான் அவர் அழைத்ததும் சிறுவன் உடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தோணிசாமியை கேரள மாநிலம் பாலக்காட்டில் வைத்து கைது செய்துள்ளதாகக் காவல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.