`இலங்கைச் சிறையில் தவிக்கும் மாணவர்களை விடுதலை செய்க!’ - ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் | Rameshwaram Fisher man protest

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (18/03/2019)

கடைசி தொடர்பு:19:45 (18/03/2019)

`இலங்கைச் சிறையில் தவிக்கும் மாணவர்களை விடுதலை செய்க!’ - ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைச் சிறையில் உள்ள இரு மாணவர்கள் உள்ளிட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சிறையில் உள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரு படகுகளை இலங்கைக் கடற்படையினர் கடலில் மூழ்கடித்தனர். இதில் முனியசாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் தத்தளித்த மற்ற 8 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் மீட்டு சிறைப் பிடித்துச் சென்றனர். நீதிமன்ற விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் சிறையில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.


இந்த மீனவர்களில் ஒருவர் +1 படிக்கும் மாணவர். மற்றொருவர் கல்லூரி மாணவர். சாம் டேனியல், துரைப்பாண்டி ஆகிய இரு மாணவர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாததால் இந்த ஆண்டு தேர்வினை எழுத முடியாமல் போனது. இது குறித்து சமீபத்தில் நடந்த கச்சத்தீவு திருவிழாவின் போது இலங்கைக் கடற்படை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ராமேஸ்வரம் மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். இதன் பின்னரும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

 
 இதைக் கண்டித்தும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டு மீட்க முடியாத நிலைக்குச் சென்ற படகுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு - பாண்டிச்சேரி விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே. போஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் என்.தேவதாஸ், ஜேசுராஜ், எமரிட், சகாயம் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.