தஞ்சையில் கொடிகம்பங்களை அகற்றுவதில் தகராறு - தேர்தல் அலுவலர்களிடம் அரசியல் கட்சியினர் வாக்குவாதம் | Political party members fight with Election officer in tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:29 (19/03/2019)

தஞ்சையில் கொடிகம்பங்களை அகற்றுவதில் தகராறு - தேர்தல் அலுவலர்களிடம் அரசியல் கட்சியினர் வாக்குவாதம்

தஞ்சாவூரில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வந்த அதிகாரிகளிடம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கொடிக்கம்பங்களை அகற்றாமல் அதை பேப்பர் வைத்து மறைத்துச் சென்றனர்.

கொடிகம்பம்

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேதி அறிவித்த நாளிலிருந்தே நடத்தை விதிமுறைகளும் அமுலுக்கு வந்தன. தேர்தல் பறக்கும் படையினர் அனைத்துப் பகுதிகளிலும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தவிர்க்கவே தேர்தல் ஆணையம் இதைச் செய்கிறது. மேலும், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களில் உள்ள கொடிகளை பறக்கவிடக் கூடாது மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். கொடிக்கம்பங்களின் பீடங்களில் உள்ள கல்வெட்டுகளை மூடி மறைக்க வேண்டும் சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும் எனத் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தேர்தல் அலுவலர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள், ரயில் நிலையம் அருகே உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அடியோடு அகற்றுவதற்குப் பணியாளர்களுடன் வந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பத்தை அவர்கள் அடி பீடத்தோடு கீழே தள்ளிவிட்டனர். மேலும், அங்கிருந்த இதர அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் பீடத்தோடு அகற்றப்போவதாக தகவல் வெளியானது. 

இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அங்கு திரண்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடிகளை நாங்கள் பறக்கவிடாமல் முன்பே அகற்றிவிட்டோம். தேர்தல் விதிமுறைகளின் படி கொடிக்கம்பங்களில் பேப்பரைச் சுற்றி மறைத்துக் கொள்கிறோம், கல்வெட்டுகளையும் மூடி விடுகிறோம் எனக் கூறினர். அதற்கு அதிகாரிகள் கொடிமரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர். 

இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர், கொடிக்கம்பங்களை பீடத்தோடு அகற்ற முடியாது, பல்வேறு கட்சித் தலைவர்களும் இங்கு வந்து சென்றதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் இது. இதை மீண்டும் அதே போல் நட்டு வைக்க முடியாது. எனவே, தேர்தல் விதிமுறைகளின்படி கொடிக்கம்பங்களையும், பீடத்தையும் பேப்பர் மற்றும் துணியால் மூடுகிறோம் எனக் கூறி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவலறிந்ததும் வந்த போலீஸார் அரசியல் கட்சியினரிடமும், அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கொடிக்கம்பங்களை சுற்றி பேப்பர் ஒட்டிக்கொள்வதாகக் கூறியதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றாமல் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க