“அண்ணன் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல்!’ - உளறிய அ.ம.மு.க வேட்பாளர் | AMMK Candidate Controversy speech

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (19/03/2019)

“அண்ணன் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல்!’ - உளறிய அ.ம.மு.க வேட்பாளர்

அமமுக

அண்ணன் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல் இது எனச் சாத்தூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியன் பேசியிருப்பது அ.ம.மு.கவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரமணியன்

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றியே தமிழ்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் ஸ்ரீனிவாசன், அ.தி.மு.க சார்பில் ராஜவர்மன், அ.ம.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் சாத்தூரில் உள்ள தலைவர்கள் சிலைக்கு எஸ்.ஜி.சுப்பிரமணியன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வாக்குகள் எப்படி விழுகிறது என்பது 23-ம் தேதி தெரியும். அப்போது இந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டியா இருமுனை போட்டியா அல்லது ஒருமுனை போட்டியா என்பது நன்றாக தெரியும். இந்தத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளரான என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள். நிச்சயம் நடக்கும். தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியை முதல்வராக ஆக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது. நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.

அவர் தவறாக வாய் தவறி சொல்லிவிட்டாரே தவிர எடப்பாடியை ஆதரிக்கவில்லை என அக்கட்சியினர் தெரிவித்தனர். அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ஒன்றுக்கொன்று எதிராக உள்ள நிலையில் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல் இது என அ.ம.மு.க வேட்பாளரே பேசியிருப்பது அ.ம.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.