`எதிர்பார்த்த மார்க்கண்டேயன்; சீட் வாங்கிய சின்னப்பன்' - விளாத்திகுளம் அ.தி.மு.க சடுகுடு! | chinnappan getting seat in vilathikulam constituency for admk

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:31 (19/03/2019)

`எதிர்பார்த்த மார்க்கண்டேயன்; சீட் வாங்கிய சின்னப்பன்' - விளாத்திகுளம் அ.தி.மு.க சடுகுடு!

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், ஓ.பி.எஸ் ஆதரவாளரான மார்க்கண்டேயனுக்கு சீட் கிடைக்கும் என பரவலாகப் பேசப்பட்ட நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் வழங்கப்பட்டதால், மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று விளாத்திகுளம். இந்த சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்த வரை முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்க்கண்டேயனும் சின்னப்பனும் முட்டிமோதிவந்தனர். இவர்களில் மார்க்கண்டேயன், தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முநாதனின் தீவிர ஆதரவாளர். சின்னப்பன், வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர். தூத்துக்குடி அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சண்முகநாதனும் கடம்பூர் ராஜூவும் இரு அணிகளாகச் செயல்பட்டுவருகின்றனர்.  

இத்தொகுதியில் 'சீட்' பிடிக்க, மார்க்கண்டேயன் சண்முகநாதன் மூலமும், சின்னப்பன் கடம்பூர் ராஜூ மூலமும் காய் நகர்த்திவந்தனர். ”மணல் கொள்ளையர்களுக்கு சீட் இல்லை” என அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்ல, “சசிகலாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜூ” என பதிலுக்குப் பேசினார். விளாத்திகுளத்தில் ஒரே நாளில்  மார்க்கண்டேயனும் சின்னப்பனும் தனித்தனியாக அவரவர் ஆதரவாளர்களை அழைத்து கட்சி விழா நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையிலான குழுவினர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்தபோது, வரவேற்பிலும் தனித்தனியாக வரவேற்றனர். ஆரம்பம் முதல் கடைசி வரை உன்னிப்பாகக் கவனித்த வேலுமணி, மாவட்டத்தில்  நிலவும் கோஷ்டிப் பூசலைப் பார்த்து அதிர்ந்தேபோனார்.

மார்க்கண்டேயனுக்கு மாநில செய்தித்தொடர்பாளர் பதவியை சண்முகநாதன் பெற்றுத்தந்த அடுத்த நாளே, சின்னப்பனுக்கு மாநில கலை இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தந்தார் கடம்பூர் ராஜூ. இப்படியாகப் பதவி பெற்றுத்தருவதிலும் போட்டி போட்டதைக் கண்டு கட்சியினரே அதிர்ந்தனர். புதூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில்கூட, முதலில் மார்க்கண்டேயன்தான் பேச வேண்டும் எனச் சொல்லி, சின்னப்பனைப் பேசவிடாமல் மார்கண்டேயனின் ஆதரவாளர்கள் தடுத்ததாலும், கூச்சலிட்டதாலும் கூட்டத்தில் கைகலப்பாகிப்போனது.” அண்ணாச்சி சண்முகநாதன் மற்றும் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவு இருப்பதால், எப்படியும் எனக்கு சீட்  கிடைச்சுடும்” எனத் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி வந்தாராம் மார்க்கண்டேயன்.

”மார்க்கண்டேயன், தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் சண்முகநாதனின் ஆதரவாளராக இருந்து என்ன பயன்? மார்க்கண்டேயன் குறிவைக்கும் விளாத்திகுளம் வடக்கு மாவட்டத்தில்தானேவருகிறது. வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜுவின் எல்லைக்குள்தான் விளாத்திகுளமும் வருகிறது. இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் அவர்தான். அப்படி இருக்கும்போது எப்படி சீட் கிடைக்கும்? கடம்பூர் ராஜுவுடன் இணக்கமாகப்போயிருக்கலாம். அதைவிட்டுட்டு வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்காமா  தேவையில்லாமல் பேசியதால்தான் மார்க்கண்டேயனுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், சவுண்டு விடாமல் சைலண்டாக கடம்பூர் ராஜூவுடன் நெருக்கமாக இருந்தே சீட்டை வாங்கிவிட்டார் சின்னப்பன்” என்கின்றனர் விளாத்திகுளம் பகுதியிலுள்ள அ.தி.மு.க-வினர்.

தனக்கு சீட் கிடைத்துவிடும் என மலைபோல நம்பிக்கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால், அதிருப்தியில் உள்ளாராம் மார்க்கண்டேயன். தமிழகம் முழுக்க அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க அ.ம.மு.க-வினர் முயற்சிசெய்துவருகின்றனர். அதேபோல, மார்க்கண்டேயனைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தென் மண்டல அ.ம.மு.க செயலாளர் மாணிக்கராஜா மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளரான சுந்தரராஜ் ஆகியோர் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

”அ.தி.மு.க சார்பில் மார்க்கண்டேயனுக்கு சீட் கிடைத்தால் நான் போட்டியிட மாட்டேன்” என தகுதிநீக்கம் செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ உமா மகேஷ்வரி அ.ம.மு.க கட்சியினரிடம் சொல்லிவந்தாராம். தற்போது, மார்க்கண்டேயனுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால், அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சின்னப்பனை எதிர்த்து, அ.ம.மு.க சார்பில் போட்டியிட உமா மகேஷ்வரி முடிவுசெய்துள்ளதாகவும் டி.டி.வி-யை சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க