`எங்க ஓட்டு எங்கள ஏமாத்தலாம்... ஆனா, நாங்க நடப்போற மரம் ஏமாத்தாது’ - வைரலாகும் சேலஞ்சிங் கேம்! | Short news about PlantandVoteChallenge game

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (18/03/2019)

கடைசி தொடர்பு:21:57 (18/03/2019)

`எங்க ஓட்டு எங்கள ஏமாத்தலாம்... ஆனா, நாங்க நடப்போற மரம் ஏமாத்தாது’ - வைரலாகும் சேலஞ்சிங் கேம்!

‘மரம் நடு - ஓட்டுப் போடு’ என்ற சேலஞ்சிங் கேம், மாற்றத்துக்கான முதல் முயற்சியாகத் தற்போது பரவிவருகிறது. அதாவது, இந்த சேலஞ்சிங் கேமில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பவர்கள் அனைவரும் பங்குகொள்ளலாம். அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு தமது வீட்டிலோ அல்லது தெருவிலோ ஒரு மரத்தை நடவேண்டும். பிறகு, அந்த மரத்துடன் ஒரு செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் #PlantandVoteChallenge என்ற ஹேஷ்டேக் மற்றும் 'அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த மரத்தைப் பராமரிப்பேன்’ என்ற வாக்குறுதியுடன் பதிவிட்டு, இந்த சேலஞ்சிங் விளையாட்டுக்கு நண்பர்களையும் அழைக்க வேண்டும். இந்த சேலஞ்சிங்கில் பங்கெடுப்பவர்கள், புதிதாக மரம் ஒன்றை நட்டு, அவர்களின் நண்பர்களை அழைக்கிறார்கள். இப்படி புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த சேலஞ்சிங் கேம், தற்போது தமிழகமெங்கும் பரவிவருகிறது. 

சேலஞ்சிங் கேம்

 

இந்த சேலஞ்சிங் விளையாட்டை முதன் முதலில் தொடங்கிய எடிசன் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களாவது, “2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிச்சிட்டாங்க. நாம ஒவ்வொரு முறையும் தவறாம ஓட்டு போட்டுக்கிட்டிருக்கிறோம். ஆனா, நாம எதிர்பார்க்கிற நல்லாட்சி அமையுதான்னு கேட்டா யாருக்கும் திருப்தி இருக்காது. இந்தியாவுல இருக்கிற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 89.8 கோடி. இவர்களில், சுமார் 10 கோடி பேர் புதிதாக வாக்களிக்கப்போறாங்க. ஒவ்வொரு முறையும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிற அதே நேரம், மரங்களுடைய எண்ணிக்கை குறைஞ்சிகிட்டே வருது. இந்த நிலை தொடர்ந்தா, வருங்காலத்தில் தனி நபர் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். இதைக் கருத்தில்கொண்டுதான், இந்த சேலஞ்சிங் கேம் ஆரம்பிச்சிருக்கோம்.

சேலஞ்சிங் கேம்

90 கோடி வாக்காளர்கள்ள, சுமார் 5 கோடி பேர் ஒரு மரத்த நட்டு, அடுத்த அஞ்சி வருஷத்துக்கு பராமரித்தாலே போதும்ங்கிறதுதான் எங்களோட இலக்கு. நாம நம்பி ஓட்டுப்போடுறவங்களால நமக்கு எந்த நன்மையும் ஏற்படாமப் போகலாம். ஆனா, அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சு நாம நடுற மரங்களால நமக்கு ஏற்படற நன்மை ஏராளமா இருக்கும். எங்களோட கோரிக்கை என்னனா, நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க. அதுக்கு முன்னாடி, ஒரு  மரத்த நட்டுட்டு ஓட்டு போட்டீங்கன்னா, அது நம்ம சுற்றுச்சூழலுக்கும் உகந்ததா இருக்கும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க