கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கிய ஹெலிகாப்டர் - பதறிப்போன கிராம மக்கள்! | helicopter landed in kollidam river in thiruvaiyaru

வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (18/03/2019)

கடைசி தொடர்பு:22:12 (18/03/2019)

கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கிய ஹெலிகாப்டர் - பதறிப்போன கிராம மக்கள்!

திருவையாறு அருகே உள்ள விளாங்குடி மக்கள், அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிவருகின்றனர். இந்த நிலையில் இன்று, ஆற்றுக்கு நடுவே மணல் புழுதி பறக்க ஹெலிகாப்டர் ஒன்று திடீரென இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மணல் குவாரி அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வுசெய்வதற்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா எனப் புரியாமல் குழப்பத்தில் தவித்துவருகின்றனர் அப்பகுதி மக்கள்.

மணல் குவாரி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது விளாங்குடி கிராமம். இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு அ.தி.மு.க அரசு தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மேலும், மணல் குவாரி அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும்; வெள்ள காலங்களில் எங்கள் ஊரே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் எனக் கூறும் அவர்கள், எங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை, வரும் தலைமுறைக்காகவே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறோம் என்று கூறுகிறார்கள்.

மணல் குவாரி

மேலும், மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதோடு, கொள்ளிடம் ஆற்றில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக  நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டுசெல்வதற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று மதியம் ஒரு மணியளவில் எங்கள் ஊர் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் புழுதி பறக்க ஹெலிகாப்டர் ஒன்று இறங்கியது. அதில் இருந்த சிலர் ஆற்றில் இறங்கிப் பார்வையிட்டனர்.

மணல் குவாரி

திடீரென ஹெலிகாப்டர் இறங்கியதை கேள்விப்பட்டு, எதற்கு எனப் புரியாமல்  நாங்கள் குழம்பிப்போனோம். இதுகுறித்து முறையாக அனுமதி வாங்கினார்களா... வந்தது யார்? மணல் குவாரி அமைப்பதற்காக இந்தப் பகுதியை ஆய்வுசெய்வதற்கு அதிகாரிகள் யாரும் வந்தார்களா என்றும் தெரியவில்லை. நாங்கள், எங்கள் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விசாரித்ததில், தஞ்சாவூரில் உள்ள விமானப்படையைச் சேர்ந்தவர்கள் பயிற்சி எடுப்பதற்காக வந்தனர் என மழுப்பலாகப் பதில் கூறுகிறார்கள். எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது ஆற்றுக்கு நடுவே இறக்கி பயிற்சி எடுப்பதற்கு என்ன அவசியம். இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது எனச் சந்தேகிக்கிறோம்.

மணல் குவாரி

ஏதுவாக இருந்தாலும் எங்ககிட்ட சொல்லிட்டு செய்வதுதானே நியாயம் எனப் புலம்பினர். தொடர்ந்து இதுபோல நடந்தால், போராட்டமும் நடத்துவோம் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், விமானப்படையைச் சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை இறக்கி பயிற்சி எடுத்தனர்; மற்றபடி ஒன்றும் இல்லை என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க