`ஓட்டுக் கேட்டு வந்தா.. வேட்டு வச்சு துரத்துவோம்' - தண்ணீர்ப் பிரச்னையால் தவிக்கும் சங்ககிரி மக்கள் | If water does not let us ignore the election says Sankagiri villagers

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (19/03/2019)

`ஓட்டுக் கேட்டு வந்தா.. வேட்டு வச்சு துரத்துவோம்' - தண்ணீர்ப் பிரச்னையால் தவிக்கும் சங்ககிரி மக்கள்

தண்ணீர்


``தவித்த வாயிக்கு தண்ணி இல்ல. ஓட்டு ஒரு கேடா... எங்க ஊரு பக்கம் யாராவது ஓட்டுக் கீட்டுன்னு கேட்டுட்டு வந்தா... வேட்டு வச்சு துரத்துவோம்'' என்று கோபம் கொப்பளிக்கக் குமுறுகிறார்கள் சங்ககிரி தாலுகா அன்.செட்டிப்பட்டியைச் சேர்ந்த கிராமத்தினர். இன்று அவர்கள் காலிக் குடங்களுடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியைச் சந்தித்து மனுகொடுக்க வந்திருந்தார்கள்.

கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்திருந்த கயல்விழி, ``நாங்க சங்ககிரி தாலுகா மோரூர் கிழக்கு அன்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்க கிராமத்தில் 80 குடும்பத்தினர் இருக்கிறோம்.

கயல்விழி

பெரியவங்க, குழந்தைகள், பெண்களென்று எல்லோரையும் சேர்த்தால் மொத்தம் 300 பேருக்கு மேல் வருவோம். நாங்க எல்லோரும் பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கூலி வேலைக்குப் போய் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துட்டு இருக்கிறோம். எங்க ஊருக்குக் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, ஏரி, குளம், குட்டை, கிணறு எதிலும் தண்ணீர் கிடையாது. அரசாங்கம் அமைத்துக் கொடுத்த காவிரி குடிநீர் தண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை நம்பி வாழ்ந்து வந்தோம். ஆனால், கடந்த ஆறேழு வருஷமா தண்ணீரும் வருவதில்லை. மாதம் ஒரு முறை, ரெண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் தண்ணீர் விடுறாங்க.  குடிப்பதற்கு, குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு என எதற்குமே தண்ணீர் இல்லை. நாங்களும் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் என எல்லோரையும் பார்த்து மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்வதில்லை.

1000 லிட்டர் ஒரு கேன் 400 ரூபாய்க்கு வாங்கி பொழப்ப ஓட்டிட்டு இருக்கிறோம். எங்க தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போடவும் மாட்டோம். ஓட்டுக் கேட்க ஊருக்குள் விடவும் மாட்டோம்'' என்றார்.

தெய்வம்மாள்

மற்றொரு பெண் தெய்வம்மாள், ``குடிக்கத் தண்ணியே கொடுக்க முடியவில்லை, அவுங்களுக்கு ஓட்டுப் போடணுமா? நாங்க சம்பாதிக்கிற பணம் தண்ணீருக்கு செலவு செய்தே ஓய்ந்து போயிட்டோம். குழந்தை குட்டிங்கெல்லாம் தண்ணி இல்லாம தவிக்குது. நாங்க எங்க போயி புகார் கொடுத்தாலும் பத்திரிகைக்காரங்க வந்து கும்பலா போட்டோ எடுத்துட்டுப் போறாங்க. எங்களுக்குத் தண்ணீர் வந்தபாடில்லை. இனியும் தண்ணீர் வரலன்னா எல்லோரும் ரோட்டுல வந்து படுத்துப்போம்'' என்றார் ஆதங்கத்தோடு.