`குலதெய்வம் கோயிலில் தரிசனம்; மக்களுக்கு இனிப்பு' - முதல் ஆளாக பிரசாரத்தைத் தொடங்கிய அ.ம.மு.க வேட்பாளர்! | ammk candidate ramasami start election campaign as first candidate in nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (19/03/2019)

`குலதெய்வம் கோயிலில் தரிசனம்; மக்களுக்கு இனிப்பு' - முதல் ஆளாக பிரசாரத்தைத் தொடங்கிய அ.ம.மு.க வேட்பாளர்!

நீலகிரி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ராமசாமி, படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தி பிரசாரத்தைத் தொடங்கினார்.

ராமசாமி

நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. பொதுத் தேர்தலை முதல் முறையாகச் சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி, முன்னதாகவே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. நீலகிரித் தொகுதி வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க சார்பில் ஆ.ராசா போட்டியிட உள்ளார். அ.தி.மு.க சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, தனித் தொகுதியான நீலகிரி தொகுதியில் போட்டியிட உள்ள மூன்று வேட்பாளர்களும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதுவரை எந்த வேட்பாளரும் தொகுதிக்குள் வரவில்லை. 

நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், நீலகிரி தொகுதியில் முதல் ஆளாகத் தனது பிரசாரத்தைத்  தொடங்கினார் ராமசாமி. கோத்தகிரியில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான பேரகேணி ஹெத்தை அம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தி பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தனக்கு வாக்கு அளிக்குமாறு ராமசாமி கேட்டுக் கொண்டார். முன்னதாக, கோத்தகிரியில் கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகக் கூட்டம் நடத்தினார். தாெடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராமசாமிக்கு கோத்தகிரி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.