`சீட்டுக்காக டெல்லியில் முகாம்' - காங்கிரஸ் பிரமுகர் வீட்டை சீல் வைத்த வங்கி அதிகாரிகள்! | Bank officials who sealed the house of Congress member

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:32 (19/03/2019)

`சீட்டுக்காக டெல்லியில் முகாம்' - காங்கிரஸ் பிரமுகர் வீட்டை சீல் வைத்த வங்கி அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் பிரமுகர், நாடாளுமன்ற சீட்டு கேட்டு டெல்லியில் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில், வங்கிக்கடன் செலுத்தாத காரணத்தால் அந்த காங்கிரஸ் பிரமுகர் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் நடந்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் தாரகை வீடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தாரகை. இவர், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொந்தத் தொழில் தொடங்க இருப்பதாகக் கூறி 3 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடன் பெற்ற தொகையை முறையாகச் செலுத்தாமலும், வங்கி அதிகாரிகளுக்கு சரியான பதிலைத் தெரிவிக்காமலும் இவர் காலம் கடத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

தாரகை வீடு

கடனை செலுத்தக் கோரி வங்கி சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், அதனை அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடிய வங்கி அதிகாரிகள், தாரகை வசித்துவந்த வீட்டை சீல் வைக்க உத்தரவுபெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்று காவல் துறை பாதுகாப்புடன் தாரகையின் வீட்டை வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு தாரகை டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்தச் சமயத்தில், அவரது வீடு சீல் வைக்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.