``அவர் வேற கட்சி… நான் வேற கட்சி…” - அண்ணன், தம்பி போட்டியால் களைகட்டும் ஆண்டிபட்டி! | brothers will contest Andipatti constituency

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:33 (19/03/2019)

``அவர் வேற கட்சி… நான் வேற கட்சி…” - அண்ணன், தம்பி போட்டியால் களைகட்டும் ஆண்டிபட்டி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி இடைத்தேர்தலுக்கு ஆளும் அ.தி.மு.க மற்றும் எதிர்க்கட்சி தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் ஆவர். இச்சம்பவம் தமிழக அளவில் பேசப்படும் பொருளாக மாறியது. ஒரே குடும்பத்திற்குள் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சீட் கொடுத்திருக்கிறார்கள் எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆ.மகாராஜன் பிரசாரத்தைத் தொடங்கினார்.

ஆ.மகாராஜன்

 

சென்னையிலிருந்து இன்று மதியம் மதுரை வந்த மகாராஜனுக்கு, ஆண்டிபட்டி கணவாயில் தி.மு.க கூட்டணிக் கட்சி தேனி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், போடி லெட்சுமணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெத்தாச்சி ஆசாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ம.தி.மு.க நிர்வாகிகள் என தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் வரவேற்பு அளித்தனர். ஆண்டிபட்டி செக்போஸ்டிலிருந்து பிரசார வாகனத்தில் மகாராஜனை அழைத்துவந்தனர்.

திமுக வேட்பாளர்

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய மகாராஜன், ``ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள 45 கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்காக முல்லைப்பெரியாறு ஆற்றிலிருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன். ஜவுளிப்பூங்கா திட்டத்தை ஆண்டிபட்டியில் செயல்படுத்துவேன்” என்றார். அப்போது, ஒரே தொகுதியில் அண்ணனும், தம்பியும் போட்டியிடுவது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ``அவர் வேற கட்சி, நான் வேற கட்சி. இதில் சொல்வதற்கு வேறு இல்லை.!” என்று பதில் கொடுத்துவிட்டு பிரசாரத்தைத் தொடர்ந்தார்.