தேர்தல் விதிமுறையை மீறினாரா திருப்பூர் அ.தி.மு.க வேட்பாளர்? | Parliament election tirupur admk candidate issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (19/03/2019)

கடைசி தொடர்பு:17:53 (19/03/2019)

தேர்தல் விதிமுறையை மீறினாரா திருப்பூர் அ.தி.மு.க வேட்பாளர்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு திருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.எஸ்.எம் ஆனந்தன்.

அதிமுக வேட்பாளர்

இந்த நிலையில், நேற்றைய தினம் திருப்பூரில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எஸ்.எம் ஆனந்தன், எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலில் மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தொழில் சார்ந்த பகுதிதான் திருப்பூர். ஆண்டுக்கு 25,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் நகரம் இது. எனவே, இந்தத் தொகுதியை மேலும் மேம்படுத்தவே இதேபகுதியில் வசிக்கக்கூடிய என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் எங்களது அரசு பல்வேறு மக்கள்  நலத்திட்டங்களைச் செய்திருக்கிறது. அந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்றார். 

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள சின்னங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க வேட்பாளர் ஆனந்தன் திருப்பூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது பிரசாரத்தை தொடங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், வேலையில் அலட்சியத்தோடும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.