`தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் தயாராக இல்லை’ - சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட மக்கள் | Public protest in sivagangai collector office

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (19/03/2019)

கடைசி தொடர்பு:09:15 (19/03/2019)

`தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் தயாராக இல்லை’ - சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட மக்கள்

மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்துக்குள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி கிராமம் மக்கள் தண்ணீர் பிரச்னையை தீர்க்கச் சொல்லி சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் பிரச்னை

சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி அருகிலுள்ள தஞ்சாக்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புலவர்சேரி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், தண்ணீர் பஞ்சத்தால் சுமார் 100 குடும்பங்கள் ஊரைவிட்டுக் காலி செய்து மதுரைக்கு இடம்பெயர்ந்து விட்டனர். ``கடந்த ஆறு மாதங்களாக ஊரில் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு ஆழ்குழாய் பைப்கள் இயங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் 30 மனுக்கள் கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் எங்களை ஏமாற்றி வருகிறார்கள். வீட்டில் டூவீலர் வைத்திருக்கும் ஆண்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று வீட்டுத் தேவைக்கு தண்ணீர் பிடித்து வருகிறார்கள். வயதானவர்கள் எப்படி இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லமுடியும். பாத்ரூமுக்குகூட  தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் இல்லாத பகுதியாக இருந்தால் நாங்கள் கஷ்டப்படுவதில் நியாயம் இருக்கிறது. வைகை ஆற்றுப்பாசனத்தில் இருக்கும் எங்கள் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை வர வாய்ப்பு இல்லை. கிராமத்தில் இருக்கும் ஆழ்குழாய் போர்களை 'ரீபோர்' போட்டால் தண்ணீர் பிரச்னை சரியாகிவிடும். இதை அதிகாரிகள் யாரும் செய்யத் தயாராக இல்லை" என்று புகார் கொடுத்திருக்கிறார்கள் கிராம மக்கள்.

மேலும், தண்ணீர் பிரச்னையை தீர்க்கச் சொல்லி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்பையும் மீறி மக்கள் மறியலில் ஈடுபட்டது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இன்ஸ்பெக்டர் ஆண்டனி, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் ஆகியோர்  இருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க