`ரஷ்ய கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு | Court order in Ship accident issue

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (19/03/2019)

கடைசி தொடர்பு:09:45 (19/03/2019)

`ரஷ்ய கப்பல் விபத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

ரஷ்ய கப்பல் விபத்தில் காணாமல்போன நான்கு இந்தியர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்ய கப்பல் விபத்து

 

கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜ், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்டின், பிரிட்டோ, அவினாஷ், சகாயராஜ் ஆகிய நான்கு பேரும் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி கேஸ்களை கொண்டுச் சென்றனர். கடந்த ஜனவரி 2-ம் தேதி ரஷ்யா அருகே சென்றபோது எல்.பி.ஜி கேஸ் கசிவின் காரணமாகக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பித்தனர். ஆனால், கப்பலில் பயணித்த நான்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை மீட்கக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

செபாஸ்டின் பிரிட்டோ

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு ரஷ்ய கடல் எல்லையில் விபத்து நடந்து பின் மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். விபத்து குறித்தும், இவர்கள் தப்பி வந்தது குறித்தும், மாயமானவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பலில் வேலை பார்த்தவர்கள், காயமடைந்தால், விபத்தில் உயிரிழந்தால் வழங்கப்படக்கூடிய நிவாரணம், இழப்பீடு ஆகியவை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் பதில்  மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.