``நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதா?” - காருண்யா முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் | Coimbatore Village youngsters dumped waste in front of private university

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:11:00 (19/03/2019)

``நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதா?” - காருண்யா முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

நொய்யல் ஆற்றை அசுத்தப்படுத்துவதாகக் கூறி கோவை காருண்யா கல்லூரியின் பிரதான வாயில் முன்பு அந்தக் கிராமத்து இளைஞர்கள் குப்பை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காருண்யா

கோவை சிறுவாணி அருகே காருண்யா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், நொய்யல் கரையோரம் என்று இயற்கையின் அழகு பரவிக்கிடந்த பகுதி அது. ஆனால், காருண்யா நிறுவனம் நொய்யல் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, நொய்யலில் கழிவுகளைக் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், நல்லூர்வயல், சாடிவயல், மத்வராயபுரம் உட்பட ஏராளமான கிராமங்கள் பாதிப்படைந்து வருகின்றன. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள், தினசரி கழிவுகளைச் சேகரித்து, அவற்றை காருண்யா குப்பைக் கிடங்கில் கொட்டி வந்தனர். தற்போது, அந்த இளைஞர்களின் குப்பை வண்டிக்கு காருண்யா நிறுவனம் அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பாக, காருண்யா நிர்வாகம், பஞ்சாயத்துச் செயலாளர் ஆகியோரிடம் அந்தப் பகுதி இளைஞர்கள் பேசியுள்ளனர். ஆனால், காருண்யா நிர்வாகம் வழங்கிய பதில் இளைஞர்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், சேகரித்த குப்பைகளை நேற்றிரவு கல்லூரியின் பிரதான வளாகத்தின் முன்பு கொட்டிவிட்டனர்.

காருண்யா

``கடந்த 32 ஆண்டுகளாக காருண்யா நிர்வாகம் இந்தக் கிராமத்துக்கு எந்தச் சேவையையும் செய்ததில்லை. அவர்கள் செய்ய வேண்டியதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதையும் தடுத்ததால்தான் அவர்களின் பிரதான வளாகத்தில் முன்பு குப்பை கொட்டினோம்” என்று அந்தப் பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக  காருண்யா பல்கலைக்கழக தரப்பில் கேட்டபோது, ``நொய்யல் ஆற்றில் நாங்கள் அசுத்தம் செய்கிறோம் என்பது பொய். அது முன்னதாகவே அவ்வாறுதான் உள்ளது. குப்பையைப் பொறுத்தவரையில், கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தைதான் கேட்க வேண்டும். அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியுது. பல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் இந்தப் பல்கலைகழகத்தின் வாயிலில் இப்படி குப்பையைக் கொட்டிச் செல்வது மட்டும் நியாயமா?” என்று கேள்வி எழுப்பினர்.