இரவில் பற்றி எரிந்த ஆலை... தப்பிய 46 ஊழியர்கள்... 10 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள் | Burning fire in theni. fire department Fighting against fire

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (19/03/2019)

கடைசி தொடர்பு:11:45 (19/03/2019)

இரவில் பற்றி எரிந்த ஆலை... தப்பிய 46 ஊழியர்கள்... 10 மணி நேரமாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

தேனியில் தனியார் ஆயில் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ, தொடர்ந்து 10 மணி நேரமாக எரிந்துவருவதால், அதை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடிவருகிறார்கள்.

ஆலையில் பற்றி எரியும் தீ

தேனி, அன்னஞ்சி விளக்கு அருகே ரத்தினம் நகரில் கர்ணா ஆயில் மற்றும் பேப்பர் மில் உள்ளது. இதன் உரிமையாளர் கருணாகரன். நேற்று இரவு 10.15 மணிக்கு ஆயில் மில் கொதிகலனில் தீப்பொறி ஏற்பட்டு பயங்கரமாகத் தீ பற்றியது. ஊழியர் பாண்டியன், பால்பாண்டியன் ஆகிய இருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 46 ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

எண்ணெய் மற்றும் அட்டை அதிகம் இருப்பதால் தீ, வேகமாக ஆலை முழுவதும் பரவியது. சம்பவ இடத்துக்கு தேனி, பெரியகுளம் ஆண்டிபட்டி, போடி, மதுரை, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், 50-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவிலிருந்து தற்போதுவரை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மில்லின் உட்புறத்தில் எண்ணெய் இருப்பதால் தீ ஜூவாலை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்

தீயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பிரத்யேக நுரை தெளித்தும் தீயை அணைக்க முடியவில்லை. இந்தத் தீயானது பிற்பகல் வரை தொடரும் எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து நேரடியாக ஆய்வுகள் மேற்கொண்டு விபத்துக்கான காரணங்களைக் கேட்டறிந்தனர்.

மேலும், இந்தத் தீ விபத்து நடைபெற்ற ஆலையின் அருகே உயர் மின்னழுத்தக் கம்பிகள் செல்வதால் அன்னஞ்சி, ரத்தினம்நகர், வடபுதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. 3 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகள் வரை சாம்பல்கள் விழுகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் 10 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.