நீட் தேர்வு, கல்விக் கடன்கள் ரத்து! - தி.மு.க தேர்தல் அறிக்கையில் மேலும் இருப்பது என்ன? | Dmk election manifesto released

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:36 (19/03/2019)

நீட் தேர்வு, கல்விக் கடன்கள் ரத்து! - தி.மு.க தேர்தல் அறிக்கையில் மேலும் இருப்பது என்ன?

ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதில் தொடங்கி, யார் யாருக்கு எந்தத் தொகுதி என்பதுவரை முடிவாகிவிட்டது. இரண்டு திராவிடக்கட்சிகள் தரப்பிலும், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகின்றன. இரண்டு ஆளுமைகளும் இல்லாத நிலையில், திராவிடக்கட்சிகள் மோதும் முதல் தேர்தல் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளன. தி.மு.க தன் பிரசார பயணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 20-ம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின். தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி வரை சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் அ.தி.மு.க பிரசார பயண திட்டத்தை வெளியிட உள்ளது.

தேர்தல் அறிக்கைஇந்த நிலையில், தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சியின் தலைவர் ஸ்டாலின், அதில் உள்ள முக்கிய அம்சங்களை மட்டும் வாசித்தார். `கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தது. நாடு இதுவரை சந்திக்காத, வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.வால் ஊழல் புகார்கள் அதிகரித்துள்ளன. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது, ஆட்சியின் அவலத்துக்குப் பெரும் சாட்சி. தேர்தல் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட குழுவுக்கு நன்றி. ஆன்லைன் மூலமாக தேர்தல் அறிக்கைக்கு எண்ணங்களை அனுப்ப கேட்டோம். அதன்படி அனுப்பியவர்களுகு நன்றி'' என்றார். 

தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

 • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்பட இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்.
   
 • வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
   
 • மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்.
   
 • பா.ஜ.க அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன பொருளாதாரத்தை மீட்க, வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

 • தனி நபர் ஆண்டு வருமானம் 86,000-லிருந்து 1,50,000 ஆக உயர்த்தப்படும்.
   
 • பெட்ரோல் டீசல், விலைநிர்ணயத்தில் பழைய முறை கடைப்பிடிக்கப்படும்.
   
 • கேஸ் தொகைக்கு வழங்கப்படும் மானியத்தொகை வங்கிகளில் செலுத்தப்படும் முறை மாற்றப்படும். 
   
 • கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
   
 • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
   
 • மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
   
 • தேசிய நெடுஞ்சாலை பராமரிக்க 10 வகுப்பு படித்த 1 கோடி பேர் பணி அமர்த்தப்படுவர்.
   
 • பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.
   
 • மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும்.
   
 • கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடங்கப்படும்.
   
 • கஜா போன்ற கடும் புயல் நிவாரணத்துக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
   
 • சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பாலியல் குற்றம் தொடர்பான வீடியோ புகைப்படம்  தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
   
 • சேதுசமுத்திர திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும். 
   
 • மதங்களை பாதுகாக்க, நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
   
 • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   
 • தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 8ஆயிரமாக நிர்ணயிக்கப்படும்.
   
 • நெடுஞ்சாலையில் தனியாரின் சுங்கவரி வசூல் முடிந்த பின்பும், வசூலிக்கப்படும் சுங்க கட்டண வசூல் ரத்து செய்யப்படும்.
   
 • கிராமப் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
   
 • தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   
 • அண்மையில் உயர்த்தபட்ட கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும்.
 •  தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  * மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லப்பட்ட கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படும்.

  * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் கூலி உயர்த்தப்பட்டு, 100 நாள்கள் என்பது 150 நாள்களாக வேலைநாள்கள் அதிகரிக்கப்படும்.

  * கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு படித்த பெண்கள், மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

  * இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியுள்ள தமிழர்கள் அனைவருக்கும் தாமதமின்றி இந்தியக் குடியுரிமை அளிக்க வலியுறுத்தப்படும்.

  * நீர் வளத்தையும் நிலவளத்தையும் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும்.

  * மத்திய-மாநில அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக  நிரப்பப்படும்.

  * தற்போது உயர்த்தப்பட்டுள்ள கேபிள் டி.வி கட்டணம் குறைக்கப்பட்டு, முந்தைய கட்டணமே வசூலிக்கப்படும்.  

  * உடல் உறுப்புகள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

  * பட்டாசு தொழிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

  * ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச மின்சாரம் வழங்கப்படும்.