``கரூர் டி.எஸ்.பியை இடமாற்றம் செய்யுங்கள்!" - தேர்தல் ஆணையத்துக்கு செயலி மூலம் புகார்! | "Transfer Karur DSP!" - Complain to the Election Commission!

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:36 (19/03/2019)

``கரூர் டி.எஸ்.பியை இடமாற்றம் செய்யுங்கள்!" - தேர்தல் ஆணையத்துக்கு செயலி மூலம் புகார்!

``மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கரூர் நகர டி.எஸ்.பியாக பணியாற்றும் கும்மராஜாவை இடமாற்றம் செய்யுங்கள். அப்போதுதான், இங்கே தேர்தல் நேர்மையாக நடைபெறும்" என்று வழக்கறிஞர் ஒருவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செயலிக்கு புகார் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அந்த புகார்


கும்மராஜா (கரூர் நகர டி.எஸ்.பி)ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழக கட்சிகள் கூட்டணிகள் அமைத்து, தொகுதிப் பங்கீடு செய்து, தொகுதிப் பட்டியலையும் அறிவித்துவிட்டன. பல கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவிக்க, தேர்தல் களம் சூடு பறக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்திய தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, செயல்படுத்தி வருகிறது. 50,000-க்கும் அதிகமான பணத்தை உரிய ஆவணங்களின்று எடுத்துச் செல்லக்கூடாது, குறிப்பிட்ட பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு அதிகாரி பணியாற்றக்கூடாது உள்ளிட்ட பல கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

அதோடு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தேர்தல் சம்பந்தமான கட்சிகளின் விதிமீறல்களையும், முறைகேடுகளையும் பற்றி ஆதாரத்தோடு புகார் கொடுக்க ஏதுவாக, CVigil என்ற அதிகாரபூர்வமான செயலியை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர், கரூர் நகர டி.எஸ்.பியாக பணிபுரிந்து வரும் கும்மராஜாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி புகார் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

இதுகுறித்து, வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் நம்மிடம், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் `` `மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரு அதிகாரி ஒரே இடத்தில் பணியாற்றக் கூடாது'னு இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் சொல்லுது. அப்படி ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரி, ஆளுங்கட்சிக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ சார்பாக நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால்தான், அத்தகைய விதிமுறையை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகிறார் கும்மராஜா. அதோடு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கரூர் நகர டி.எஸ்.பியாக பணிபுரிந்து வருகிறார். அவர் ஆளுங்கட்சிக்கு சார்பாக நடந்துகொள்வதாக பலரும் புகார் சொல்கிறார்கள். அவரை வேறு பகுதிக்கு பணிமாறுதலில் செல்லவிடாமல், ஆளுங்கட்சியினரே தடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுது. அதனால், 'கரூர் மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாக நடக்க ஏதுவாக கும்மராஜாவை உடனடியாக வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யணும்'னு வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ செயலிக்கு புகார் அனுப்பி இருக்கேன். நடவடிக்கை இல்லைன்னா, கோர்ட் மூலமாக கும்மராஜாவின் இடமாற்றத்தை உறுதிசெய்வேன்" என்றார் அதிரடியாக.