வேட்பாளர் பட்டியல் ரெடி.. பிரசார ரூட்டும் ரெடி..  களத்தில் குதிக்கும் தீபா! | deepa peravai candidates list will be released on tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (19/03/2019)

கடைசி தொடர்பு:14:37 (19/03/2019)

வேட்பாளர் பட்டியல் ரெடி.. பிரசார ரூட்டும் ரெடி..  களத்தில் குதிக்கும் தீபா!

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த ஜெ.தீபா, இன்னும் இரண்டு நாள்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, பிரசாரத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபா

இதுகுறித்து நம்மிடம் பேசிய தீபா பேரவையின் மூத்த நிர்வாகிகள், ``தீபா பேரவையின் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த 16, 17-ம் தேதிகளில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் வந்துள்ள 340 விருப்பமனுக்களில் இருந்து, தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இன்று மாலை அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்பதால், அதற்குள்ளாக வருமானவரி கணக்கை தயார் செய்ய வேண்டிய பணி வேட்பாளர்களுக்கு இருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தீபாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் தொடங்கும். இதற்கான ரூட் மேப் தயாரிக்கப்பட்டு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.

தேர்தல் செலவை அந்தந்த வேட்பாளரே பொறுப்பேற்றுக் கொள்ளும்படி தீபா பேரவையின் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், மாவட்டச் செயலாளர்களே வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுவர் எனத் தெரிகிறது. பிரசாரத்தில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தத் தீர்மானித்துள்ளதால், தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீபா முடிவெடுத்து இருக்கிறாராம். மண்டலம் வாரியாக, குறைந்தது பதினைந்து நாள் பிரசார திட்டமும் தயாராக உள்ளது. முழு பிரசாரத்தையும் தீபா நிறைவு செய்வாரா என்பது அவருக்குதான் தெரியும்.